BREAKING ‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை ஆகியன குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் அதிமுக தயக்கம் காட்டுவதால் அக்கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், நாங்கள் இல்லாமல் யாரும் அரசியலே செய்ய முடியாது என்ற நிலையை நாங்கள் உருவாக்க உள்ளோம். அதிமுக என்ற இயக்கம் அனைத்து சமுதாய மக்களையும் ஒரு தாய் மக்களாக பாவித்த இயக்கம். ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி அந்த இயக்கத்தை வன்னியர்கள், கொங்கு கவுண்டர்கள் சமுதாயத்திற்குமான அமைப்பாக மாற்றி கட்டமைத்துவிட்டார். இது வளர்ச்சிககான பாதை அல்ல, அழிவை நோக்கிய பாதை.
அதிமுகவில் இருக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் 75 லட்சம் பேர் நான் சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. நாங்கள் இல்லாமல் அதிமுகவால் அரசு அமைக்க முடியாது. எங்களுடைய இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாததால் அதிமுகவுடனான கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக அறிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடமும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தோம். ஆனால் அவருடைய திடீர் மரணம் எதிர்பார்க்காதது. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியிடமும் பலமுறை எங்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பேசினோம், அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதிமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படைக்காக சீட்டு கேட்கவில்லை என்றும் கருணாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.