நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை! – சீமான் கோரிக்கை
கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்கள் தொடர்பாக நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடம் எழுந்திருக்கும் மோதல் போக்கும், நிகழ்ந்தேறிய வன்முறையும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு மீன்வளச் சட்ட வரைவை அவசரகதியில் நிறைவேற்றத்துடிக்கும் இக்கொடுஞ்சூழலில், அதற்கெதிராக மீனவ மக்கள் ஓரணியில் திரள வேண்டிய தேவையிருக்கையில், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பில் உள்ள பிரச்சினைகளால் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்ளும் செய்தியறிந்து பெரும் கவலையடைந்தேன்.
எத்தகைய சிக்கலையும் தீர்த்திடப் பேச்சு வார்த்தையையும், சனநாயகப்பூர்வமான அணுகுமுறைகளையும் பின்பற்றுவதுதான் உகந்ததாக இருக்குமே ஒழிய, ஒருவரையொருவர் தாக்கும் வன்முறைப்பாதையைத் தேர்வு செய்வதல்ல;
பிரித்தாளும் சூழ்ச்சி எனும் உட்பகை வளர்க்கும் ஆயுதம் கொண்டே வரலாறு நெடுகிலும் தமிழர்கள் வீழ்த்தப்பட்டிருக்கும் வேளையில் நடைபெறும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் வேதனையளிக்கின்றன.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மீனவர்கள் ஒற்றுமையின் பலமாக இருந்த்து, தற்போது அவை தகர்க்கப்பட்டு, மீன்பிடிப்புக் காரணமாக நடுக்கடலில் இரு தரப்பினருக்கிடையேயும் கடும் மோதல் நிகழ்ந்திருப்பது மீனவர்களின் ஓர்மை குறித்தான பெரும் அச்சத்தைத் தருகிறது.
தமிழக மீனவர்கள் மீது கொலைவெறிச்செயலில் ஈடுபடும் சிங்களப்பேரினவாத அரசின் தொடர் அத்துமீறல்களையும், கொடும் வதைகளையும் எதிர்த்துக்களம் காண்கையில், உள்நாட்டு மீனவர்களிடையே உருவாகியிருக்கும் பூசலும், பிளவும் நம்மைப் பின்னோக்கி இழுத்துச்செல்லும் வரலாற்றுப் பெருங்கொடுமையாகும்.
மீனவர்களிடையே எழுந்திருக்கும் இத்தகைய குழு மனப்பான்மையும், இரட்டை நிலைப்பாடும் பெரும் வன்முறையாக மாறக்கூடுமென்பதால் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவக்கிராம மக்கள் அதீதக் கலக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பல மாதங்களாக இப்பிரச்சினைகள் இருந்துவரும் நிலையில் கொடுமையான சட்டத்திட்டங்கள் மூலம் மீனவ மக்களிடம் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் அரசின் வன்செயல் கடும் கண்டனத்திற்குரியது.
ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் கருத்து வேற்றுமையைக் களைந்து, அவர்களை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரவும், மீனவர்களிடையேயான பிளவைச் சரிசெய்து இணக்கமான போக்கை உருவாக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.