புதுடில்லி, அக் 4:
வெளிநாடுகளில் அதிகமான சொத்து குவித்த இந்தியர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்களின் பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு, உலகளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து வெளியான பனாமா பேப்பர்ஸ் ஆவணம், உலகையே பரபரக்க செய்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists (ICIJ)) மூலம், இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த ஆவணங்களை 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இதில், இந்திய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த பட்டியலில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான மூன்று மாதங்களில், விர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனத்தை கலைக்கும்படி சச்சின் கேட்டுக்கொண்டது தெரியவந்துள்ளது. இதனால், சச்சின் டெண்டுல்கருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது,