Breaking: பாமக அசத்தல் தேர்தல் அறிக்கை ! இலவச திட்டங்களே இத்தனை இருக்கா?
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு களமிறங்குகிறது பாட்டாளி மக்கள் கட்சி. இந்நிலையில், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தேர்தல் அறிக்கையை காணொளி காட்சி மூலமாக வெளியிட்டார். பாமக தேர்தல் அறிக்கையில், எஸ்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை பாமக செலுத்தும் என்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச லேப் டாப் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் பாமக தலைவர் ராமதாஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதே போல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் மாதம் ரூ.500 வழங்கப்படும்.
+1, +2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் நிதியுதவி அளிக்கப்படும்.
தமிழகத்தில் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்கப்படும்.
கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி ரூ.18,000லிருந்து ரூ.25,000 உயர்த்தப்படும்.
60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும்.
பொதுத் துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க் கடனில் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்க் கடனுக்கு 15% மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டின் நிர்வாக வசதிக்காக 2வது தலைநகராகத் திருச்சியும், 3வது தலைநகரமாக மதுரையும் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் தொழில் தலைநகரமாகக் கோயம்புத்தூர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் அண்மையில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களும் மறுசீரமைக்கப்படும். ஒரு மாவட்டத்தில் 12 இலட்சம் பேர் வாழும் வகையில் மாவட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு, மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்தும் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும்.
மகளிருக்கான மகப்பேறு விடுப்புக்காலம் 12 மாதங்களுக்கு அதிகரிக்கப்படும்.