10 ஆண்டுகளில்
இந்தியா பிரம்மிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது
ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி வெள்ளி விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு
திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா இன்று நடைபெற்றது. இதில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம பீடாதிபதி ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் அருளாசி வழங்கினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் முன்னாள் செயலர்கள் ,முதல்வர்கள் ,நீண்ட காலமாக சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி கௌரவித்தார். மேலும் கல்வி, கலை மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;-
இந்தக் கல்லூரி மற்ற கல்லூரிகளை போல் அல்லாமல் ஆசிரமம் மூலமாக சிறப்பாக இயங்கி வருகிறது.
இந்த நாட்டிற்கு என்னென்ன தேவையோ அதை உணர்ந்த பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார். இந்த பாரத பூமி புண்ணிய பூமி. இங்கு ஞானிகள் ரிஷிகள், முனிவர்கள் நிரம்ப இருக்கிறார்கள்.
இந்த நாடு உலகத்தை ஒரு குடும்பமாக பாவிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு உலக நாடுகள் நம்மை உற்று நோக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளால் இந்தியா பிரம்மிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கம் இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என தேசம் விரும்புகிறது.
ஜி. 20 மாநாடு நடத்தி அதன் வாயிலாக இந்தியாவின் வளர்ச்சி உலகிற்கு பறைசாற்றப்பட்டது.
கொரோனா வைரஸ் ஏழை, பணக்காரன் என்றில்லாமல் எல்லோரையும் உயிர்பலி வாங்கியது.
அதில் இருந்து தப்பிக்க தடுப்பூசி கண்டுபிடிக்க மாட்டார்களா? என உலக நாடுகள் ஏங்கிய போது இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த தடுப்பூசி உலக நாடுகளுக்கும் சப்ளை செய்யப்பட்டது.
அப்போது நாட்டு மக்களை காப்பாற்றாமல் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதாக பிரதமர் மீது விமர்சனங்கள் எழுந்தன.ஆனால் அதில் நாட்டு மக்களையும் உலக மக்களையும் பிரதமர் நரேந்திர மோடி காத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் சி.ஏ. வெங்கடேஷ் கல்லூரி குறித்த அறிமுக உரையாற்றினார்.
முடிவில் கல்லூரி முதல்வர் எம் பிச்சைமணி நன்றி கூறினார்.