திமுக ஆட்சியில்தான் கிராமப்புறங்களில் மின்சாரம், சாலை, பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

Filed under: தமிழகம் |

திமுக ஆட்சியில்தான் கிராமப்புறங்களில் மின்சாரம், சாலை, பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேச்சு.

தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில்தான் கிராமங்களில் மின்சாரம், சாலைகள், பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட திமுக செயலாளருமான கே ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.

முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், மலைக்கோட்டை பகுதி சார்பில் 89 ஆவது நிகழ்வாக நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது :-

தமிழகத்தில் எத்தனையோ கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் பதவி வகித்தாலும் திமுக முதல்வர்களின் ஆட்சிதான் பிற மாநிலத்தவர்களையும் ஏங்க வைத்த ஆட்சி என்றால் மிகையில்லை. குறிப்பாக முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி, சமூக விஞ்ஞானியாக அழைக்கப்பட்டவர். அவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களால், ஏழை எளிய மக்கள் வாழ்வு மேம்பட வழிவகுத்தது. கிராமங்கள்தோறும் மின்சார வசதி, போக்குவரத்து, கிராமப்புற சாலைகள் என அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியவர், எனவேதான் அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்து வருகிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இவ்வாறு அவர் பேசினார்.

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது :-

முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய ஒரே தலைவர். அவரது வழியில் தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சி செய்துகொண்டுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இது மகளிருக்கான ஆட்சி, மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கான இலவச பேருந்து, சுய உதவிக்குழுக்களுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.எனவே தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி மலைக்கோட்டை பகுதி செயலாளர் மோகன் தலைமை வகித்தார். திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும் மாநகராட்சி 3 ஆவது மண்டலத் தலைவருமான மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜி. திவ்யா மாவட்ட நிர்வாகிகள் செங்குட்டுவன் மூக்கன் லீலாவேலு சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டச்செயலாளர் இளங்கோ மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் உதயகுமார் மாநகர தொண்டரணி அமைப்பாளர் தினகரன் வரவேற்றனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்து தீபக், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சிந்துஜா ஆகியோர் நன்றி கூறினர்.