பா.ஜ.க மூலம் தமிழகத்துக்கும் நமது தேசத்துக்கும் சேவை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது – அண்ணாமலை உணர்ச்சிபூர்வமான கடிதம்!

Filed under: அரசியல் |

இன்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் முனைவர் திரு முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை பற்றி அண்ணாமலை ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில்;

அன்புள்ள நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் பணிவான வணக்கம்.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.- இறைமாட்சி, குறள் 382

அச்சமின்மை, கொடை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கு பண்புகளும் குறையின்றி இருப்பதே நல்ல அரசனின் இயல்பாகும்.

நான் இன்று புதுதில்லியில் பாரதீய ஜனதா கட்சியில் முறைப்படி இணைந்துள்ளேன். நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வையும், ஆற்றல்மிக்க தலைமையும் என்னை எப்போதும் ஈர்த்துள்ளன. நமது பிரதமரின் தலைமையில், உலக அரங்கில் இந்தியா ஒரு ஆற்றல் வாய்ந்த சக்தியாக உருவெடுத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்களை வறுமையின் பிடியிலிருந்து அகற்றி, நம் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்யாமல், நம் விவசாயிகளுடன் தோளோடு தோள் நின்று மேலும் உகந்த கொள்கைகளினால் நம் நடுத்தர வர்க்கத்தை செழிக்கச் செய்வதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அடைந்துள்ளோம்.

இந்நாட்டின் சாதாரண மனிதர்கள் மற்றும் அவர்களின் அபிலாஷைகளை சுமந்து நிற்கும் ஒரு கட்சியின் உறுப்பினராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த கட்சி எப்போதுமே நம் தேசத்தை பற்றிய எண்ணத்தை மையமாகக் கொண்டு, நாம் அனைவரும் பெருமை கொள்ளக்கூடிய ஒரு நாட்டை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஐ.பி.எஸ் அதிகாரியாக கர்நாடக மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது தற்போது இக்கட்சி, தமிழகத்துக்கும் நமது தேசத்துக்கும் சேவை செய்வதற்கான வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கிறது.

புது தில்லியில் இருக்கும் சரியான தலைவர்களின் வழிகாட்டுதலால் நமது நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, திரு. மோடி அவர்களின் தலைமையின் கீழ் நம் நாடு அதன் சரியான இலக்கை அடைவதைக் காண நான் உண்மையில் ஆர்வமாய் இருக்கிறேன். நம்மைக்குரிய முன்னேற்றம் மற்றும் வெற்றி இன்னும் சிறிது காலத்தில் கிட்டும். அந்த இலக்கை நம் நாடு அடைய நானும் ஒரு சிறிய பங்காற்ற விரும்புகிறேன்.
ஜெய் ஹிந்த்…

இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.