உங்களின் படத்தை தியேட்டரில் பார்ப்பது தான் எனக்கு மகிழ்ச்சி – சூர்யாவுக்கு இயக்குனர் ஹரி கடிதம்!

Filed under: சினிமா |

கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் மூன்று மாதத்துக்கு மேல் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடிடி தளம் மூலம் ரிலீஸ் ஆகி வருகிறது.

தற்போது நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள சூரரைப்போற்று படம் தியேட்டரில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் என சூர்யா சில நாட்கள் முன்பு அறிக்கை மூலம் அறிவித்தார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் “அருவா” படத்தை இயக்கும் இயக்குனர் ஹரி சூர்யாவுக்கு ஒரு கோரிக்கையை அறிக்கை வைத்துள்ளார். அந்த அறிக்கையில் இயக்குனர் கூறியது; மதிப்பிற்குரிய திரு.சூர்யா அவர்களுக்கு,

உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள் ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி. OTT-யில் அல்ல.

நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு, தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால்தான், நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்து விட வேண்டாம்.

சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம்..தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் , உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம்.

தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான் இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு இயக்குனர் ஹரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.