திருச்சி மாநகராட்சியில் :
நாளை 267 மையங்களில் போலியோ
தடுப்பு சொட்டு மருந்து வழங்கல்.
திருச்சி மாநகராட்சியில், மொத்தம் 267 மையங்களில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுகிறது
நாடு முழுவதும் போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அரசு, ஆண்டுதோறும் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகள் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மார்ச் 3, ஞாயிற்றுக் கிழமை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 60,613 குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
சொட்டு மருந்து வழங்க 267 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு குழுக்கள் மூலம் மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவ மனைகள், மாநகராட்சி நகர் நல மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய பொது இடங்களில் இந்த மையங்கள் செயல்படும். மேலும் ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், சுற்றுலா பகுதிகள் ஆகிய இடங்களில், பயணம் செய்யும் குழந்தைகளுக்கும் மருந்துகள் வழங்கும் வகையில் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிற மாநிலங்கள், மாவட்டங்ணிகளிலிருந்து இடம் பெயர்ந்து தொழில் புரிவதற்காக வந்து தங்கியுள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கும் நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்துகள் வழங்கவும் ஏற்பாடுகள் செயயப்பட்டுள்ளன. இதற்கென 1036 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர ரோட்டரி, லயன்ஸ் சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் தொண்டுள்ளம் படைத்தவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.