திருச்சி, உறையூர் நாச்சியார் கோயிலில் பரமபத வாசல் திறப்பு

Filed under: தமிழகம் |

திருச்சி, உறையூர் நாச்சியார்
கோயிலில் பரமபத வாசல் திறப்பு

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் பரமபத வாசல் திறப்பு விழா, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏரரளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அங்கநாதர் கோயிலின் உபகோயிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் 2 ஆவது தலமாகும். மேலும் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் திருவாய்மொழி திருநாள்விழா பிப்ரவரி 1 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கியது. அன்று முதல் 5 ஆம்தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை கருவறையில், திருவாய்மொழி பிரபந்தம் சேவித்தல். இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் தீர்த்தகோஷ்டி, இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பொது ஜன சேவையும் முத்துக்குறி அரையர் தீர்த்தம், ஸ்ரீசடகோபம் சாதித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

பரமபத வாசல் திறப்பு :
இதையடுத்து வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விழாவையொட்டி மாலை 5 மணிக்கு கருவறையிலிருந்து உற்சவ நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் நோக்கி புறப்பட்டார். இதனையடுத்து பரமபத வாசல் 5.30 க்கு திறக்கப்பட்டது. பின்னர் நாச்சியார் வழிநடை உபயங்கள் கண்டருளி வாசலைக் கடந்து, மாலை 6.30 மணிக்கு ஆழ்வார் ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபம் வந்து சேந்தார். பரமபத வாசல் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் உற்சவ நாச்சியாரை தரிசனம் செய்தனர். மாலை 6.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருவாய்மொழி கோஷ்டி அலங்காரம் அமுது செய்தல் திருப்பாவாடை கோஷ்டியும், தொடர்ந்து இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை திருவாராதனம் வெள்ளிச்சம்பா அமுது செய்தல் தீர்த்த கோஷ்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இரவு 8 மணி முதல் 8.45 மணி வரை பொதுஜன சேவையும் அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு தாயார் திருவாய்மொழி மண்டபத்திலிருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு கருவறையைச் சென்றடைந்தார்.

தொடர்ந்து பிப்ரவரி 9 ஆம் தேதி வரை திருவாய்மொழி 4 ஆம் திருநாள் நிகழ்சிகளையொட்டி கருவறையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பாடாகும் தாயார் திருவாய்மொழி மண்டபத்தை 6.30க்கு அடைந்து, அலங்காரம், வெள்ளிச்சம்பா அமுது, தீர்த்தக்கோஷ்டியை தோடர்ந்து இரவு 9 15 முதல் 9.45 வரை பொதுஜன சேவை வழங்கி, மீண்டும் இரவு 10 மணிக்கு புறப்பட்டு 10.45க்கு கருவறை சென்றடைகிறார். 10 ஆம் தேதி தீர்த்தவாரி, திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நிகழ்வுகள் நடைபெறும். 11 ஆம் தேதியன்று இயற்பா சாற்று மறையுடன் விழா நிறைவு பெறுகிறது.

அன்றைய தினம் கருவறை சேவை கிடையாது. காலை 9.30 மணிக்கு தாயார் கருவறையில் இயற்பா தொடக்கமும், காலை 9.45 மணி முதல் காலை 11.45 மணி வரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. முற்பகல் 11.45 முதல் பகல் 12.30 மணி வரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகிறது.