விழிப்புணர்வு மாரத்தானில் பரிசு வழங்குவதில் குளறுபடி.போட்டியில் பங்கேற்ற இரு சிறுமிகள் மயங்கி ரோட்டில் விழுந்தனர்.

Filed under: தமிழகம் |

தேனியில் மாவட்ட போலீசார், தனியார் நிறுவனம் சார்பில் நேற்று நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானில் பரிசு வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது. போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் வீரர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போட்டியில் பங்கேற்ற இரு சிறுமிகள் மயங்கி ரோட்டில் விழுந்தனர்.

தேனி பெரிக்ஸ் அகாடமி’, போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் பிப். 4ல் (நேற்று) நடத்துவதாக விளம்பரம் செய்தனர். நுழைவு கட்டணமாக ரூ.300 வசூலித்தனர். வயது அடிப்படையில் போட்டி 5 பிரிவுகளாக நடத்தப்படும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த போட்டியில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஆண், பெண் சிறுவர்கள் எனப் பல பிரிவுகளாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், 250 பேருக்கு சைக்கிள்களும் பரிசாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இளைஞர்களுக்கு முறையான டோக்கன் வழங்கப்படாததால் பதிவு செய்யாமல் ஏராளமான இளைஞர்கள் போட்டியில் பங்கேற்றதாகவும், போட்டியாளர்களுக்கு வேண்டிய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக ஏதும் ஏற்படுத்தி தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் ஓட்டப்பந்தயத்தில் மயக்கமடைந்த சிறுவர், சிறுமிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட முறையாக ஏற்படுத்தவில்லை என்றும், தனியார் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறி இளைஞர்கள் தேனி – மதுரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடை செய்யப்பட்டது.

சுமார் இரண்டு மணி நேரமாக, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் தேனி மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முறையாக அடிப்படை வசதி செய்து தராமல், போட்டி நடத்திய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் எனக் கூறி இளைஞர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தனியார் நிறுவனம் மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து நடத்தும் மாரத்தான் போட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் குளறுபடி ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.