அரசாணைகள் தமிழில் வெளியிட கோரிய வழக்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!!

Filed under: சென்னை,தமிழகம் |

அரசாணைகள் தமிழில் வெளியிட கோரிய வழக்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!!

தமிழ்நாட்டில் அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் ஆகியவற்றை தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிடக்கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் முதல் மொழியாக தமிழ், இரண்டாம் மொழியாக ஆங்கிலம் என இரட்டை மொழி கொள்கை பின்பற்றப்பட்டுவரும் நிலையில், தொன்மையான தமிழ்மொழி அரசு அலுவலர்களால் புறக்கணிக்கப்படுகிறது.
அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் ஆகியவை ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் தமிழில் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிலையில், அதே நடைமுறையை அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும்போது பின்பற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. அதேபோல், நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினரால் கடிதங்கள் தமிழில் அனுப்பப்பட்டுவருகின்றன.
அரசாணைகளை தமிழில் வெளியிட வேண்டும் எனக்கோரி நான் தமிழ்நாடு அரசுக்கு மனு அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது இந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மார்ச் 29ஆம் தேதிக்குள் தமிழ்நாடு தலைமைச் செயலர், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.