ஜூலை 30
சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ளது அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலுடன், 7 இணைப்பு கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியே நிர்வாக ரீதியிலான சொத்துக்கள் மற்றும் கடைகளும் உள்ளன.
இந்த கோயிலில் செயல் அலுவலராக ராதாமணி என்பவர் பொறுப்புக்கு வந்ததும், கோயிலில் எப்படி பணம் சுருட்டவேண்டும் என்பவதற்காக திட்டம் போட்டு, தன்னுடைய சுரண்டல் வேலைகளுக்கு ஒத்துவராத பணியளர்களை கோயிலில் இருந்து, சஸ்பெண்ட் செய்துவிட்டார். கோயிலில் கலெக்ஷன் பிரிவில் பணிபுரியும் மதனகோபால், பார்த்தசாரதி, கணக்கர் மற்றும் மேலாளரான பிரபாகர், அலுவலக உதவியாளரான நரேந்திரன், டைப்பிஸ்ட் மைதிலி, லீலா, கோயிலில் மணி அடிப்பவர் ராஜேந்திரன், அச்சகர்கள் பாலசுப்பிரமணியன், ஸ்ரீதர், அலுவலக வாச்மேன் பாபு, சமையலர் தேவநாதன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துவிட்டு கோயில் சொத்துக்களை கொள்ளையடித்து வரும் முன்னால் பணியாளரான கோவிந்தன் என்பவரை, பணி நியமனம் செய்து தனக்கு மிகவும் வேண்டிய, தனது சொந்த ஊரான தர்மபுரியில் இருந்து சபரி, ரமேஷ் ஆகியோரை பணி நியமனம் செய்துள்ளார்.
பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டுமென்றால் ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும். ஆணையரின் ஒப்புதல் பெறாமலேயே இரண்டு எழுத்தர்கள் சபரி, ரமேஷ் டைப்பிஸ்டாக கிருத்திகா மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர் கோவிந்தன் ஆகியோரை நியமனம் செய்துள்ளார் ராதாமணி. இது குறித்த புகாரை விசாரித்த ஆணையருக்கு அல்வா கொடுத்துள்ளார் ராதாமணி.
7 இணைப்பு கோயில்களிலும், இவரின் ராஜ்ஜியம் தான். ஊழல் தலைவிரித்தாடுகிறது. கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாத ஊதியம் உள்ளிட்ட விதிகளின் படி எவ்வித பணப்பயன்களும் வழங்கப்படாமல் பாரபட்சமாக செயல்பட்டு வருகிறார் ராதாமணி. கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மூலம் வரும் வருமானத்தை முறையே கணக்கு காட்டாமல் கையாடல் செய்து வருகிறார். விழாக்காலங்களில் செய்யப்பட்ட செலவினங்கள், போலியான ஆவணங்கள் மூலம் ரசீதுகள் வைத்து, போலியாக கணக்கெழுதி கையாடல் செய்து வருகிறார் ராதாமணி. கோயில்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவீனங்களுக்காக, இவர் அரசு விதிகளை மீறி, பல பணியாளர்கள் பெயரிலும் கோவிந்தன், மற்றும் சில தனிநபர்கள் பெயரிலும், காசோலைகள் கொடுத்து, பணம் பெற்றுக்கொண்டு, போலியான ரசீதுகள் மற்றும் வவுச்சர்களை வைத்து, கோயில் பணத்தை சூறையாடியுள்ளது தெரியவந்துள்ளது.
ராதாமணி பொறுப்புக்கு வந்த பிறகு, செலவீன கணக்குகள் விவரம் குறித்து வைக்கப்பட்டுள்ள ரசீதுகள், வவுச்சர்கள், பில்கள் ஆகியவை குறித்தும், கோயில் நிர்வாகத்தின் சொத்துக்கள், வருவாய், செலவினங்கள் குறித்தும் சிறப்பு தணிக்கை செய்தால், ராதாமணியின் ஊழல் வெளிசத்திற்கு வரும். சென்னை, சண்முகராயன் தெருவில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தையப்ப முதலியார் தெருவில், பத்மாவதி என்பவர், கோயிலுக்கு சொந்தமான வீட்டில் இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டியுள்ளார். ராதாமணி கரன்சி வாங்கிக்கொண்டு கட்டிடம் கட்டியதை கண்டுக்கொள்ளவில்லை என்கிறது அறநிலையத்துறை வட்டாரம்.
இதுகுறித்து புகார்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என புலம்புகிறது பக்தர்கள் வட்டாரம். செயல் அலுவலர் ராதாமணி ஏற்கனவே வேலூர் ஸ்ரீ செல்லியம்மன் கோயில், தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் மற்றும் சோளாபுரியம்மன், பாலாற்றங்கரை செல்லியம்மன், கலாஸ்பாளையம் கோதண்டராம சாமி மற்றும் கற்பக விநாயகர், பேரிப்பேட்டை காளிகாம்பாள், வாணியத்தெரு கனக துர்க்கையம்மன் கோயில் உள்ளிட்ட 22 கோயில்களில் செயல் அலுவலராக பணியாற்றி, அக்கோயில்களில் பல்வேறு முறைகேடுகள் புரிந்தவர் ஆவார். வேலூரில் செயல் அலுவலராக பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகள் மற்றும் புகார்கள் காரணமாக ராதாமணியயை சென்னைக்கு இடமாற்றம் செய்தனர். எனினும், அவர் ஆட்டம் சென்னையிலும் தொடர்கிறது என்கின்றனர் அறநிலையத்துறை அலுவலர்கள்.
ராதாமணி தான்தோன்றித் தனமாக பணியாளர்களிடமும், பொதுமக்களிடமும் மரியாதை குறைவாக ஆணவ போக்குடன் செயல்பட்டு வருகிறார். இவர் உயர் அலுவலர்களின் பெயர்களைக் கூறி, பல முறைகேடுகளை புரிந்துள்ளார். இதுகுறித்து பலமுறை புகார்கள் அளித்தும், உரிய நடவடிக்கை இல்லை. நேர்மையான அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, கோயில் சொத்துக்களை பாதுகாத்திடவும், கையாடல் செய்துள்ள கோயில் பணத்தை மீட்டிடவும், முறைகேடான செயல்களை தடுத்திடவும் கோரி, கோயில் பக்தர்கள், அறநிலையத்துறை ஆணையர் பனீந்திர ரெட்டியிடம் புகார் அளித்துள்ளனர்.
செயல் அலுவலர் ராதாமணி, மீது பல புகார்கள் வந்தாலும், இணை ஆணையர் மற்றும் ஆணையர் அலுவலக ஊழியர்கள் துணையோடு, ஆணையர் பார்வைக்கே செல்லாமல் தடுத்து வருகிறார். அதிருப்தியில் உள்ள பக்தர்கள், குற்றச்செயல் புரிந்த செயல் அலுவலர் மீது நடவடிக்கை கோரியும், முறைகேடாக போலி ரசீதுகள் மூலம் சுருட்டிய பணத்தை மீட்க வேண்டும் எனக்கோரியும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு வைத்துள்ளனர்.