புது தில்லி: இன்னும் சில நாட்களில் இந்தியாவில் கரோனா தடுப்பூசி இறுதிப் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
சில மருந்துகளுக்கு சோதனை அடிப்படையில் அவசர அனுமதியளிக்கபட்டு செலுத்தப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் கரோனா தடுப்பூசி இறுதிப் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் குழுவின் சுகாதாரப் பிரிவு உறுப்பினரான மருத்துவர் வி.கே.பால், ‘இந்தியாவில் இன்னும் சில நாட்களில் கரோனா தடுப்பூசி இறுதிப் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளது. நாம் நம்பிக்கையுடன் செயலில் ஈடுபட வேண்டும். வரும் நாட்கள் சிறப்பாக அமையும் என்று நம்பலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
முழுக்க இந்தியாவிலேயே தயாராகும் மூன்று மருந்துகள் உட்பட ஒன்பது தடுப்பூசிகள் தற்போது இந்தியாவில் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.