தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளம் அதிகமாக உள்ளது. அதே போல் ஈரோட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை உடைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரலவாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள நீரோடைகள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் மாக்காம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட தடுப்பணையிலும் இரு தினங்களாக வெள்ளம் ஏற்பட்டது. இன்று காலை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் புதிய தடுப்பணை உடைந்து நொறுங்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கூத்தம்பாளையம் ஊராட்சி சார்பில் ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட புதிய தடுப்பணை இரண்டே நாள் மழைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் நொறுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.