ஒரே நாளில் 300 பத்திரிக்கையாளர்களுக்கு பரிசோதனை: தமிழக அரசுக்கு நன்றி

Filed under: சென்னை |

சென்னை, ஏப்ரல், 20

பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்று, 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் பரிசோதனையை நடத்தியதற்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தமிழகம் முழுதும் வேகமாக பரவி வருகிறது.  இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்கள் சிலருக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இது, பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. களத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள், கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ள பத்திரிகையாளர்களுக்கு முதற்கட்டமாக சிறப்புப் பரிசோதனை செய்திடவேண்டும் என்ற கோரிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழக அரசிடம் முன்வைத்தது. பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளும் இதே கோரிக்கையை முன்வைத்தன.

பத்திரிகையாளர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று பெருநகர சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் இணைந்து இன்றைய தினம் (20-04-2020) 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் பரிசோதனையை நடத்தியுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கி பகல் 1.30 மணி வரை சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 265 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தலைமைச் செயலகம் மற்றும் மாநகராட்சி சுகாதார மையங்களிலும் சுமார் 50க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.

 

இந்நிலையில், இதற்காக சென்னை பத்திரிகையாளர் மன்றம், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

நேற்றைய தினம் நம்முடைய பத்திரிகை சகோதரர்கள் சிலருக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில், தமிழக அரசின் இந்த உடனடிப் பரிசோதனை நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது. கொரோனா நோய் அறிகுறிகள் தென்படும் பத்திரிகையாளர்கள், களத்தில் முன்னணியில் ஈடுபட்டு வரும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நாளை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திரிகையாளர் உடல் நலனில் அக்கறை கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனை சாத்தியமாக உதவிய சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் திருமிகு. அ.க.விசுவநாதன் இ.கா.ப ,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திருமிகு. கோ.பிரகாஷ் இ.ஆ.ப ,செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் திருமிகு.பொ.சங்கர்.இ.ஆ.ப. ஆகியோருக்கும் செயல்படுத்திய ஓமந்தூரார் அரசினர் தோட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.நாராயணபாபு, மருத்துவக் கண்காணிப்பாளர்மரு.ராஜேஸ்வரி,நோடல் அதிகாரி மரு.ரமேஷ் ,மரு.சுமதி, சென்னை மாநகராட்சி செய்தித்தொடர்பு இணை இயக்குநர் திரு.உமாபதி,டி1 திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் திரு.ஜி.மணிவண்ணன் மாநகராட்சி சுகாதார அலுவலர் திரு.வாசுதேவன் , மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட நல்ல உள்ளங்கள் அனைவரையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.