காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: வ.கௌதமன் கோரிக்கை!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, ஏப்ரல் 29

கண்ணுக்கு தெரியாத கிருமி இப்பூமிப்பந்தில் மனித வாழ்வையே புரட்டி போட்டு விட்டது. ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்திருந்தாலும் உயிர்களைப் பறிப்பதை கொரோனா நிறுத்தவில்லை.

அதிலிருந்து மீள உலகமே ஒரு பெரும் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இப்போரில் பெரிதும் போற்ற வேண்டியவர்களும் வணங்குதலுக்குரியவர்களும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர்.

வ.கௌதமன்

மருத்துவர்களின் தியாக உணர்வை பாராட்டி அவர்களை கௌரவித்து அவர்ளுக்கு பாதுகாப்பு முதற்கொண்டு பல்வேறு திட்டங்களை செய்ய அரசு முன் முன்வந்திருப்பது உள்ளபடியே போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது. அதேபோல், தூய்மை பணியாளர்களுக்கும் அரசு சில சலுகைகளை வழங்குவதற்கு முன்மொழிந்திருப்பது மரியாதைக்குரியது. இந்நிலையில், காவல்துறையின் அளப்பறிய பணியை நாம் பாராட்டியே ஆகவேண்டும். காவல் துறையினரின் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது. எத்தனையோ காவலர்கள் மனைவி, பிள்ளைகளை பார்க்கக் கூட முடியாமல் எங்கோ ஓர் மூலையில் நின்று சரியான உணவு கூட இல்லாமல்  இரவு பகலாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெண் காவலர்களில் பலரும் பிள்ளைகளையும் கணவனையும் சந்திக்க இயலாமல் அதுகுறித்தெல்லாம் தன் நிலையை விளக்கக் கூட இயலாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் ஒரு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களை சுற்றி உள்ள குடியிருப்புகளே மூடப்பட்டிருக்கின்றன. பெரம்பலூரில் ஒரு காவலருக்கு தொற்று உறுதியானதால் வீ.களத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டது. சமீபத்தில் கன்னியாகுமரியில் ஒரு பெண் காவலருக்கும் வாணியம்பாடி தாலுகா  பெண் ஆய்வாளருக்கும் பாதிப்பு என பதட்டமான செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றும் காவலர்களுக்கு இந்நிலை தொடர்ந்தால் அது சமூக தொற்றாக மாறி பேராபத்தில் கொண்டுபோய் நிறுத்தி விடும். ஆகையினால் போர்க்கால அடிப்படையில் மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல உயர்தர பாதுகாப்பு கவசங்கள் உடனடியாக வழங்கப்படவேண்டும். அது மட்டுமல்லாமல் காவல்துறையினருக்கு அரசு துரிதமாக செய்ய வேண்டிய மிக முக்கியமான விடயங்களை மரியாதைக்குரிய முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

உணவுப்படி என்று ஒன்றை கொடுத்துவிட்டு பயணப்படியான TA வை நிறுத்திவிட்டார்கள். அந்த உணவுப்படியும், பயணப்படி பணத்தில் (Travelling Allowance) TA பாதி தான். ரோட்டில் நின்று வண்டிகளைப் பிடித்து ஆய்வு செய்யும் காவலர்களிடம், வருகின்ற வண்டிகளைத் தடுத்து ஆய்வு செய்ய கையுறை, முகக் கவசம் போன்ற சரியான பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில்  இல்லை. அவ்வாறு வரும் வாகனத்தில் நுண்ணுயிர் தெளிப்பான் தெளித்து பிறகு கையாளும் வகையில் வசதிகள் செய்து தர  வேண்டும். காவலர்கள் பணிக்கு செல்ல போதிய வாகன வசதிகள் இல்லை, ஏழு நாட்கள் சுழற்சி முறையில் பணி, என்ற முறை சரியாக பின்பற்றப் படவில்லை. பெண்காவலர்களுக்கு இயற்கை உபாதைகள் கழிக்க போதுமான வசதிகள் இல்லை. ஒவ்வொரு காவலரும் தங்கள் வீட்டிற்கு சென்று வருவதால் வீட்டில் அவர்கள் தங்களை சுத்தம் செய்து கொள்வதற்கும், காவலர் குடியிருப்பு, மற்றும் அங்கு குடியிருப்பவர்களுக்கு போதிய கிருமி நாசினி,மருத்துவ  வசதிகள் இல்லை.

காவலருக்கு உணவு என்பதே கேள்விகுறியாக உள்ளது. சுகாதாரமான சத்தான உணவு வழங்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு சிறப்பு ஊதியம் வழங்கும் போது காவலர்களுக்கு மறுக்கப்படுவது மனவருத்தம் அளிக்கிறது. ஒவ்வோரு காவலரும் அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அன்றாட தேவைகளுக்கான பொருட்கள் வாங்கி கொடுப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்நிலை மாறவேண்டும் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன், பாதிக்கப்படும் காவலர்களுக்கு துறைசார்ந்த உயரிய விருதினையும் வழங்கி, பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் ஐம்பது லட்சம் நிவாரண உதவித் தொகையும், அரசு மரியாதையுடன் கூடிய அடக்கமும், அவர்களின் வாரிசுக்கு அரசு வேலையினையும் உறுதி செய்திட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் , இந்தியாவிலேயே காவல்துறையினரை சிறப்பாக ஊக்கமூட்டி துணை நிற்கும் முதல் மாநிலமாக தமிழகம் சிறப்பினை அடைவதோடு மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் என்பதாலும்  மரியாதைக்குரிய முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி  அவர்களிடம் இக்கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் என வ.கௌதமன் அறிக்கை.