குழாயை தொடாமல் கை கழுவலாம் பிராட்வே மார்க்கெட்டில் இயந்திரம்!

Filed under: சென்னை |

சென்னை, ஏப். 22,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பிராட்வே பகுதியில் குழாயை தொடாமலேயே கை கழுவும் வகையில் ஒரு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனை, பெருநகர சென்னை மாநகராட்சி, ‘யங்க் இந்தியன்ஸ்’ என்ற தனியார் அமைப்புடன் இணைந்து அமைத்துள்ளது.

தமிழகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர தேவையான பல நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றப்படுவதை உறுதிபடுத்தும் வகையில், சென்னையில் உள்ள, பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய இடங்களில், 60க்கும் மேற்பட்ட தற்காலிக சந்தைகளை, பெருநகர சென்னை மாநகராட்சி அமைத்துள்ளன.

பிராட்வே பேருந்து நிலையத்திலும், தற்காலிக சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தினமும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருகின்றனர். மக்கள் அதிகம் வருவதால், இங்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இங்கு வரும் மக்கள், குழாய்களை தொடாமலேயே கைகளை கழுவும் வகையில், ஒரு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதை, பெருநகர சென்னை மாநகராட்சி, ‘யங்க் இந்தியன்ஸ்’ மற்றும் இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புடன் இணைந்து, நிறுவியுள்ளது.

இதுகுறித்து, ‘யங்க் இந்தியன்ஸ்’ அமைப்பின் தலைவர் விஷால் மேத்தா கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பிராட்வே பேருந்து நிலைய தற்காலிக சந்தையில், குழாய்களை தொடாமலேயே கைகளை கழுவும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. காய்கறிகளை வாங்குவதற்கு முன், மக்கள் தங்கள் கைகளை கழுவ வேண்டும் என்பதை அறிவுறுத்தவே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இயந்திரத்தின் கீழே உள்ள பெடலை, காலால் அழுத்தினால், குழாயில் தண்ணீர் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இயந்திரத்தை, 50 சதவீத பொது இடங்களில் நிறுவ திட்டமிட்டுள்ளோம்,” என கூறினார்.

இந்த திட்டத்தை செயல்படுத்திய குழுவினருக்கு, அமைச்சர் வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பிராட்வே மார்க்கெட் பகுதியில், குழாயை தொடாமலேயே கை கழுவும் இயந்திரத்தை நிறுவியுள்ள, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் யங் இந்தியன்ஸ் குழுவினருக்கு, என் இதயப்பூர்வமான பாராட்டுகள். இதனை, பொதுமக்கள், பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.