கொரோனா உதவி எண்ணில் சுமார் 6,000 அழைப்புகள்!

Filed under: புதுச்சேரி |

புதுச்சேரி, ஜூன்  11

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்பட்ட உடனேயே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் மக்களுக்கு உதவும் வகையில் உடனடியாக இலவச தொலைபேசி எண்களை அறிவித்தன.  சில மாநில அரசுகள் தரைவழி தொலைபேசி எண் அல்லது மொபைல் எண்ணை உதவி எண்களாக அறிவித்தன. 

உதாரணமாக தமிழ்நாடு அரசு 044-29510500 என்ற தொலைபேசி எண்ணையும் ஒடிசா அரசு 9439994859 என்ற மொபைல் எண்ணையும் அறிவித்தன. குஜராத், பீகார், கர்நாடகம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் 104 என்ற பொது எண்ணையே உதவி எண்ணாக அறிவித்தன. புதுச்சேரி அரசும் 104 என்ற பொது எண்ணையே கோவிட்-19 இலவச உதவி எண்ணாக அறிவித்தது.  மத்திய அரசின் உதவி எண் +91-11-23978046 என்பது ஆகும். புதுச்சேரி சுகாதாரத் துறை 23-2-2020 அன்றே இந்த 104 இலவச எண் சேவையைத் தொடங்கி விட்டது. சுகாதார இயக்குனர் அலுவலக வளாக மாடியிலேயே இந்த உதவி எண்ணானது செயல்பட்டு வருகிறது. இதுவே கோவிட்-19க்கான கட்டுப்பாட்டு அறையாகவும் செயல்படுகின்றது. 

சுகாதார இயக்குனர் டாக்டர் எஸ் மோகன்குமார் மற்றும் துணை இயக்குனர் டாக்டர் ரகுநாதன் ஆகியோர் தலைமையில் இந்தக் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 104 உதவி எண்ணில் 3 தொடர்பு இணைப்புகள் உள்ளன. இந்தக் கட்டுப்பாட்டு அறை 24X7 என்ற முறையில் அனைத்து நாட்களிலும் செயல்படுகிறது. மூன்று ஷிப்டுகளாக இயங்கும் இந்த அறையில் ஒவ்வொரு ஷிப்டுக்கும் ஒரு அலோபதி மருத்துவர், ஒரு ஆயுஷ் மருத்துவர் மற்றும் ஒரு மனநல ஆலோசகர் என மூவர் பணியில் இருக்கின்றனர். இந்த உதவி எண்களுக்கு 3 விதமாக அழைப்புகள் வருகின்றன, பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் முதல் வகை ஆகும். கொரோனா வைரஸ், தொற்றுக்கான வாய்ப்புகள், சிகிச்சை, மருத்துவமனை போன்ற கேள்விகளைப் பொதுமக்கள் இந்த உதவி எண்ணில் கேட்கின்றனர். அவர்களுக்குத் தகுந்த பதில்கள் தரப்படுகின்றன. பயம், பீதி, பதட்டம் மற்றும் மனக்கோளாறுகளுடன் இந்த உதவி எண்ணில் அழைப்பவர்களுக்கு மனநல ஆலோசனையும் தொலைபேசி வழியாகவே தரப்படுகிறது. 

இரண்டாவது வகை அழைப்புகள் மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மருத்துவக் குழுவினரிடம் இருந்து வரும் அழைப்புகள் ஆகும்.  புதுச்சேரிக்குள் வெளியில் இருந்து வருபவர்களின் உடல்நிலை மற்றும் கொரோனா தொற்று குறித்த விவரங்களை எல்லைப் பகுதியில் உள்ள மருத்துவர்கள் 104 உதவி எண்ணிற்குத் தெரிவிப்பார்கள். உள்ளே வந்தவர்கள் எந்த முகவரிக்குச் செல்வதாக எல்லைப் பகுதியில் தெரிவித்து உள்ளனரோ அந்த முகவரிகளை உள்ளடக்கிய அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்களுக்கு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்படும்.  அந்தப் பணியாளர்கள் அந்தந்த முகவரிகளுக்குச் சென்று வெளியில் இருந்து வந்தவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

மூன்றாவது வகை அழைப்புகள் 1031 என்ற எண்ணில் இருந்து திருப்பி அனுப்பப்படும் அழைப்புகள் ஆகும். இந்த 1031 என்ற எண் காவல்துறையால் பராமரிக்கப்படும் எண் ஆகும். இந்த எண்ணில் கொரோனா தொடர்பாக வரும் அழைப்புகள் அனைத்தும் 104க்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. இந்த 104 உதவி எண் மையத்திற்குப் பொறுப்பாளர்களில் இருப்பவர்களில் ஒருவரான டாக்டர் எல்.ரவிவர்மன், இந்த மையத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 60 முதல் 70 அழைப்புகள் வருகின்றன, 10-6-2020 வரை மொத்தமாக 5804 அழைப்புகள் வந்துள்ளன. நாங்கள் இந்த உதவி எண் மூலம் பொதுமக்களுக்கும் அரசுக்கும் பாலம் போன்று செயல்படுகின்றோம் எனத் தெரிவித்தார். இந்த உதவி எண் தொலைமருத்துவ வசதி போன்றே செயல்படுகின்றது. மனநல ஆலோசனை மூலம் நாங்கள் பலருக்கு ஆறுதலைத் தந்துள்ளோம். கர்ப்பிணிகளுக்குப்  பிரசவத்துக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்துகள் போடுவதற்கும் வழிகாட்டியுள்ளோம். இங்கு பணியாற்றுபவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுகின்றனர், என டாக்டர் ரவிவர்மன் மேலும் தெரிவித்தார். 

இந்த உதவி எண் மையத்தில் மனநல ஆலோசகராக பணியாற்றும் ஆர்.ஷியாமளா, ஊரடங்கின்போது மது விற்பனை தடை செய்யப்பட்டு இருந்ததால் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு எங்களைத் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தனர்.  தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என்றுகூட அவர்களில் சிலர் கூறினர். அனைவருக்கும் நாங்கள் தொலைபேசி வழியாகவே மன நல ஆலோசனை வழங்கினோம். இந்த ஊரடங்குச் சூழலைச் சாதகமாக எடுத்துக் கொண்டு குடிப்பழக்கத்தை கைவிட்டு விடுங்களேன் என்று ஊக்கப்படுத்தினோம் என்கிறார். மது கிடைக்காததால் பதற்றமும் விரக்தியும் அடைந்த கணவர்களின் பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் இரவு நேரங்களிலும் தொடர்பு கொண்டு என்ன செய்வது எனக் கேட்டனர்.  சூழலக்குத் தகுந்தவாறு அவர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறினோம், என்று ஷியாமளா மேலும் தெரிவித்தார்.

உதவி மையத்தின் சித்த மருத்துவர் டாக்டர் பி.பிரசன்னா, பலரும் கொரோனா வைரஸ் தொற்றாமல் இருப்பதற்கான முன்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தே கேட்டனர். கபசுர குடிநீர் பற்றி பல அழைப்புகள் வந்தன. வெளியூரில் இருந்து வந்து இங்கு தங்குபவர்கள் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் வைரஸ் தொற்றி விடுமோ என்று பயப்படுவதாகக் கூறுகின்றனர். நாங்கள் உடனடியாக மருத்துவக் குழுவை அவர்கள் சொல்லும் இடங்களுக்கு அனுப்பி கண்காணிக்கின்றோம், என்றார். தேவையான தகவல்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் மன ஆற்றுப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் மூலம் 104 உதவி எண் மையம் சிறப்பாக சேவை ஆற்றி வருகின்றது.  சுமார் 6,000 அழைப்புகளுக்கு பொறுமையாகப் பதில் சொல்லி இருப்பதே ஒரு சாதனைதான்.