கொரோனா குறித்த சுய தகவல் பதிவு – முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார் !

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை  : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும்  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை- IIT மற்றும் பி.எஸ்.என்.எல். இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா குறித்த சுய தகவல் பதிவு மற்றும் விரைவு நடவடிக்கை அமைப்பின் 94999 12345 என்ற குரல்வழிச் சேவையை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்கள்.

இந்த குரல்வழிச் சேவையானது, மொத்தஅலைபேசி பயனாளிகளில் நவீன கைபேசியை (ஸ்மார்ட் போன்) பயன்படுத்தாத 60 சதவிகித பயனாளிகளை சென்றடைய ஏதுவாக செயலி மற்றும் இணைய சேவை இல்லாத குரல் அழைப்புகளின் வாயிலாக, கொரோனா வைரஸ் குறித்தும், அந்நோய் தொற்று பரவும் விதம் குறித்தும் பொதுவான கேள்விகளை தானாகவே பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் அளிக்கும் பதில்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறைக்கு மேல் நடவடிக்கைகளுக்காக பகிரப்படும்.

இந்த குரல்வழிச் சேவை மூலம், பயனாளிகள் மிஸ்டுகால் அல்லது குறுந்தகவலை 94999 12345 என்ற எண்ணுக்கு அனுப்பவேண்டும். பயனாளிகள் பதிவு செய்த தகவலை குறுஞ்செய்தியாக உடனடியாகப் பெறுவார்கள். அதைத்தொடர்ந்து, பி.எஸ்.என்.எல். எண்ணிலிருந்து பயனாளிகள் அழைப்பை பெறுவார்கள். பயனாளிகள் தங்கள் நோய்நிலை, கொரோனா வைரஸ் சார்ந்த அறிகுறிகள், நீரழிவுநோய், இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகள் குறித்த தகவல்களை இந்த அழைப்பின் போது தெரிவிக்கலாம். பயனாளிகளின் பதில்கள் மற்றும் இருப்பிடங்களை ஆராய்ந்து, மேல் நடவடிக்கைகளுக்காக தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு, நோயின் தன்மைக்கேற்ப அவசர ஊர்தி உள்ளிட்ட மருத்துவ சேவையை பெற, பயனாளிகளுக்கு மாவட்ட அவசரகட்டுப்பாட்டு அறை உதவிசெய்கிறது. மேலும், நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மேற்படி ஆதாரங்களை மாவட்ட அவசரகட்டுப்பாட்டு அறை பெறமுடியும்.
 
இந்தசேவையின் மூலம், பயனாளிகள் அளிக்கும் பதில்கள் அவர்களது இருப்பிடங்களோடு ஆராய்ந்து, குறைந்த, நடுத்தர மற்றும் அதிக அபாய பயனாளிகள் என்று வகைப்படுத்தப்பட்டு, கீழ்க்காணும் சேவைகள் வழங்கப்படும்.
 
* குறைந்த அபாய பயனாளிகள் – கை கழுவுதல், இருமும் முறை, சமூக விலகல் மற்றும் சுற்றுப்புற பொதுசுகாதாரம் உள்ளிட்ட சுகாதார அறிவுரைகள் வழங்குதல்.
 
* நடுத்தரஅபாயபயனாளிகள் – மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை வாயிலாக அவசர மருத்துவ சேவைகள் கிடைப்பதற்கான உதவிகள் வழங்குதல்.
 
* அதிகஅபாயபயனாளிகள் – நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை வாயிலாக செயல்படுத்துதல். 
 
இக்குரல்வழிச் சேவை மூலமாக, பெருவாரியான மக்களை தொடர்பு கொண்டு, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் விரைந்து செயல்படுத்த முடியும். மேலும், பொதுமக்கள், குடும்ப நபர்கள் அல்லது தனி நபருக்கான கொரோனா குறித்த அறிகுறிகளை சுய பதிவு செய்தல், தங்கள் பகுதிகளில் கொரோனா சார்ந்த தகவல்களை அரசுக்கு தெரிவித்தல், கொரோனா நோய் குறித்து செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி தெரிந்து கொள்ளுதல், அருகிலுள்ள அரசு அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரியை தொடர்பு கொள்ளுதல், கை கழுவுதல், இருமும் முறை, சமூக விலகல், சுற்றுப்புற பொதுசுகாதாரம் போன்றவைகள் குறித்த சேவைகளையும் பெற்று பயன் பெற முடியும். 
இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், மத்திய தொலைத் தொடர்பு துறை செயலாளர் மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்பு ஆணையத்தின் தலைவர் 
அன்ஷுபிரகாஷ், தகவல் தொழில் நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ்வர்மா, மத்திய தொலைத் தொடர்புத் துறை கூடுதல் செயலாளர் அனிதாபிரவீன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ், மின் ஆளுமை ஆணையர் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமைமுகமையின் முதன்மை செயல் அலுவலர் சந்தோஷ் கே. மிஸ்ரா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.