கொரோனா செயலி : அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, ஏப்ரல்22

கோவிட்-19 க்கு எதிராக அதிவிரைவு செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு, அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி BIT வளாகம் முன்முயற்சி எடுத்து விடுத்துள்ள இந்தத் திட்டத்தில். மும்பை ஐ.ஐ.டி யில் இயங்கும் Spoken Tutorial Project, சென்னையிலுள்ள Madras School of Social work (MSSW), புதிய தொழில் முனைவோருக்கான வழிகாட்டு மய்யமாக பெங்களுரில் இயங்கும் Derbi Foundation, பேரிடர் மேலாண்மையில் சிறப்பான அனுபவங்களையும் பயிற்சிகளையும் கொண்ட நிறுவனம் என இந்தியா அரசால் அங்கீகரிக்கப்பட்ட Climate Smart Technologies (CST) நிறுவனம் ஆகிய ஒருங்கிணைந்து, தேசிய அளவிலான COVID -19 Bioinformatics Online Hackathon ஒன்றை அறிவித்துள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் 27 முதல் மே 6 வரை இந்த “Online Hackathon” நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் 7 ஆம் நாள் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கே.சூரப்பா, பதிவாளர் பேராசிரியர் எல்.கருணாமுர்த்தி, கூடுதல் பதிவாளர் பேராசிரியர் எஸ்.செல்லத்துரை அவர்களும் திருச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயற்கை மூலிகைப் பொருட்களுக்கான மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டனர். அந்தச் செயலி, அழியும் நிலையிலுள்ள இயற்கை மூலிகைகளைக் காத்து, அவற்றை மக்களுக்குப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். மூலிகை விவசாயத்திற்கான நிலத்தைப் பண்படுத்துதல், மண் பரிசோதனை, நீர்ப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், பல காலங்களாக மூலிகை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவாசாயிகளின் அனுபவங்களைச் சேகரித்துப் பயன்படுத்துதல் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் அந்தச் செயலி இருந்தது.

இந்தியாவில் கோவிட்-19 ஒரு பெருந்தொற்றாக உருவெடுத்த நேரத்தில், துணைவேந்தர் பேராசிரியர் எம்.கே. சூரப்பா பல்கலைக்கழக திருச்சி வளாக ஆய்வுக்குழுவினரிடம், கோவிட்-19 வைரஸ் பரவலுக்கும், பாதிப்புகளுக்கும் எதிரான தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து பெருந்தொற்று அபாயத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்படி ஆலோசனைகளைகூறி ஊக்கப்படுத்தினர்.

அண்ணா பல்கலைக்கழக BIT வளாக முதல்வர் முனைவர் டி.செந்தில்குமார், மருந்தாக்கவியல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் முனைவர் ஆ.புரட்சிகொடி, கணினிப் பொறியியல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் முனைவர் அன்னபூரணி, சென்னை MSSW வின் சமூகத்திற்கான தொழில்முனைவோர் துறைத்தலைவர் ஆன்டனி ஸ்டீஃபன், CST நிறுவன இயக்குநர் ஜீவானந்தன் துரைசாமி ஆகியோர் இந்த ஆன்லைன் ஹேக்கத்தான் நிகழ்வைத் தமிழ்நாட்டு அளவில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். மும்பை ஐ.ஐ.டி யின் Spoken Tutorial துறைப் பேராசிரியர் கண்ணன் மௌட்க்லய இந்தத் திட்டத்தை அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (AICTE) அங்கீகாரத்தோடு அகில இந்திய அளவில் நடத்துவது என்ற நிலை நோக்கி வளர்த்தார். பெங்களுரில் இயங்கும் டெர்பி ஃபவுண்டேஷன் நிறுவனர் ஜெகன் கார்த்திக் இத்திட்டத்தில் பல்வேறு தொழில் முனைவோர்களை ஈடுபடுத்தப் பொறுப்பேற்றுள்ளார்.

கொரொனா ஒழிப்புக்கான “ஆரோக்கிய சேது” எனும் செயலியின் பயன்பாடு இந்தப் புதிய ஹேக்கத்தான் திட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது. அதுபோல ஒவ்வொரு வகையான பேரிடருக்கும் தனித்தனியாகப் பல்வேறு செயலிகள் உள்ளன. இந்த நிலையிலிருந்து முன்னேறி, பலவகையான பேரிடர்களையும் கணக்கில் கொண்டு, 25 துறைகளை உள்ளடக்கி ஒரு ஒருங்கிணைந்த செயலியை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும் .

பேரிடர்க்காலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கண்டறிதல், அந்தத் தொழிலாளர்களுக்கான தங்குமிடங்கள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான பணிகளைப் பிரித்தளித்தல், கோவிட்-19 க்கான சிகிச்சை மய்யங்கள், மருந்தகங்கள், முதல் நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களை ஒருங்கிணைத்தல், நோயாளிகளின் சிகிச்சை மற்றும் அறிகுறிகளின் நிலை தொடர்பான தகவல்கள், மருத்துவர் நியமனம்,மருத்துவமனை அனுமதி, ஒருங்கிணைந்த டோல் ஃப்ரீ எண்கள், மக்கள் நெருக்கத்தை அறிந்து எல்லையை வரையறுத்தல்,நிவாரண நிதிகளையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டுதல்,கோவிட் பரிசோதனைகளை நடத்தி அதன் முடிவுகளை ஆன்லைனில் பெறுதல், வீட்டுக்கண்காணிப்பில் சிகிச்சைகளைத் தொடர்தல், நேரந்தவறாத சிகிச்சைகளுக்கான அலாரம், தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கு உணவளித்தல், நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனைகளை வழங்குதல், அரசுப் பணிகளை ஒருங்கிணைத்தல்,அத்தியாவசியப் பணிகளுக்காக பயண அனுமதிகள், தனிநபர்கள் பயண அனுமதி கோருதல், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விநியோகங்கள், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு உதவுதல், ஆதரவற்றோர், திருநங்கை, திருநம்பி, மாற்றுத்திறனாளர்கள், எச்.ஐ.வி யினர், தங்கும் இடமற்றவர்கள், தனித்து வாழும் பெண்கள் ஆகிய பிரிவினருக்கு உதவுதல் என்பவை போன்ற பல்வேறு தளங்களை ஒருங்கிணைத்து, பேரிடர்க்காலத் துன்பங்களிலிருந்து மக்களைக் காக்க ஒரு அதிவிரைவுச் செயலியை உருவாக்குவதே இத்திட்டத்தின் செயல் இலக்கு.

 
ஐ.டி தொழில்நுட்ப மாணவர்களுக்கும், அந்தத் துறை சார்ந்த பேராசிரியர்களுக்கும் இந்த ஹேக்கத்தான் தங்கள் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வில் இந்தியாவிலுள்ள அனைத்துத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் பங்கேற்குமாறு AICTE யும் அழைப்புவிடுக்கிறது. National Skill Development Corporation (NSDC) எனும் மத்திய அரசு நிறுவனமும் Ministry of Skill Development and Enterperurship (MSDE) என்ற மத்திய அரசுத்துறையும் இந்நிகழ்வுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

வெற்றி பெறும் பங்கேற்பாளர்களின் சாதனைகள் அவர்களது கல்வி நிறுவனங்களின் NIRF மற்றும் NAAC தரவரிசை உயர்வதற்கும் துணையாக இருக்கும். சிறந்த செயலிகள் மற்றும் இணைதளங்களை உருவாக்குபவர்களுக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் பரிசுகள் வழங்கப்படும். அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும். தேசிய அளவிலான COVID -19 Bioinformatics Online Hackathon வரும் ஏப்ரல் 27 முதல் மே 06 வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்கு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கே.சூரப்பா, பதிவாளர் பேராசிரியர் எல்.கருணாமூர்த்தி தங்களது வழிகாட்டுதலையும், ஆதரவையும் வழங்குகிறார்கள்.

இது பற்றிய இன்னும் கூடுதல் தகவல்களை இதற்கான இணைய தளத்தில் காணலாம். <https://www.covid19hackathon.in/>