சட்ட அதிகாரிகளுடன் சட்ட அமைச்சர் ஆலோசனை!

Filed under: இந்தியா |

புது டெல்லி,மே 11

இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் தலைமையிலான சட்ட அதிகாரிகளுடன் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று காணொளி மூலம் கலந்துரையாடினார்.

நாம் இப்போது சவாலான காலகட்டத்தில் இருக்கிறோம், இந்தச் சவால்களை சரியான வழியில் கையாள்வதற்கு அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆலோசித்து வரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வழிநடத்திச் செல்கிறார் என்று சட்ட அமைச்சர் தனது தொடக்க உரையில் கூறினார். முடக்கநிலை குறித்து ஒருமித்த கருத்தினை ஏற்படுத்தவும், இதனால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடலுக்காகவும் முதலமைச்சர்களுடன் பிரதமரே நேரடியாக காணொளி மூலம் கூட்டங்கள் நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பல்வேறு தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் அமைச்சரவைச் செயலாளர் கலந்துரையாடி வருகிறார். அவற்றின் மூலம் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், உள்துறை அமைச்சகம், சுகாதார அமைச்சகம் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்கள், பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழிகாட்டுதல்களைப் பிறப்பித்து வருகின்றன.

இதுபோன்ற சவாலான நேரங்களில், அதீத ஆர்வத்தால் பொது நல மனுக்கள் தாக்கல் ஆவதைத் தவிர்த்தாக வேண்டும் என்று சட்ட அமைச்சர் வலியுறுத்தினார். சிறந்த செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு இணையவழி நீதிமன்ற (இ-நீதிமன்றங்கள்) செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்திருப்பது பற்றியும், மற்ற திட்டங்கள் பற்றியும் நீதித் துறை செயலாளர் தகவல்களைத் தெரிவித்தார். இணையவழியில் வழக்குகளைப் பதிவு செய்வதற்கு, நிறைய வழக்கறிஞர்கள் முடக்கநிலை காலத்தில் பதிவு செய்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இணையவழியில் வழக்குகள் பதிவு செய்ய முடக்கநிலை காலத்தில் 1282 வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர் என்றும், அதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 543 பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நோய்த் தொற்றின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இன்னும் சில காலத்துக்கு காணொளி மூலம் நீதிமன்றச் செயல்பாடுகளை நடத்துவது தொடரும் என்று கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. சவால்களை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, நீதித் துறையில் டிஜிட்டல் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகளைப் பயன்படுத்த முயற்சிக்குமாறு சட்ட அமைச்சர் கேட்டுக்கொண்டார்.