சூடுபிடிக்கும் ஐபிஎல் தொடர்: அடுத்த சுற்றுக்குள் நுழையும் அணி எது?

Filed under: விளையாட்டு |

துபாய், செப் 28:
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதால், அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் நான்காவது அணி எது என்பதில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதன் 40வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 57 பந்தில் 82 குவித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி அடைந்ததால் நான்கு அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் ஐபிஎல் புள்ளி பட்டியலில் சென்னை மற்றும் டெல்லி 16 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. மூன்றாவது இடத்தில் பெங்களூர் அணி 12 புள்ளிகளுடன் உள்ளது.

இதனை அடுத்து கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகளும் தலா 8 புள்ளிகள் பெற்று உள்ளன. சென்னை, டெல்லி மற்றும் பெங்களூரு அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டதாகவே கருதப்படுகிறது.

கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகளில் ஒரு அணி மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் 10 புள்ளிகளுடன் மிக எளிதில் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கும். ஆனால் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதையடுத்து தற்போது நான்கு அணிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இந்த தொடரில் தகுதி பெறும் நான்காவது அணி எது என்பது, இனிவரும் போட்டிகளில் தெரியவரும்.