தேனியில் ஜல்லிக்கட்டு போட்டியை போல் வள்ளிநகரில் பன்றி தழுவும் போட்டி’ நடைபெற்றது.
தேனி அல்லிநகரம் வள்ளிநகரில் நேற்று பன்றி தழுவும் போட்டி ஒன்று நடந்தது. 70 முதல் 100 கிலோ எடையிலான பன்றிகள் போட்டிகளில் பங்கேற்றன. வாடிவாசல் போன்று அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவிழ்த்து விடப்படும் பன்றிகள் 3 அடி துாரத்தில் போடப்பட்ட கோட்டை தாண்டிய பின், அங்கிருக்கும் பன்றி தழுவும் வீரர்கள் பிடிக்க முயற்சிப்பார்கள். அதில் ஒருவர் மட்டுமே பன்றியை பிடிக்க வேண்டும். பன்றி எல்லைக் கோட்டை நெருங்காத வண்ணம், அதன் பின்னங்கால்களை மட்டுமே பிடிக்க வேண்டும்.
80 கி., எடையுள்ள பன்றியின் பின்னங்காலைப் பிடித்து நிறுத்தும் வீரர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பன்றிகள் பங்கேற்றன. திரைப்பட நடிகர் விக்னேஷ் வெற்றி பெற்ற பன்றிகளின் உரிமையாளர்கள், வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வனவேங்கை கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் உலகநாதன் செய்திருந்தார்.