டில்லியில் திமுக அலுவலகம் திறப்பு

டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்த மு.க.ஸ்டாலின் சோனியா காந்தி அவர்களுக்காக காத்திருந்தார். சற்று நேரத்தில் வந்தடைந்த சோனியா காந்தியை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.


அண்ணா சிலையை திறந்து வைத்தார் துரைமுருகன். கலைஞர் சிலையை டி.ஆர். பாலு எம்.பி. திறந்து வைத்தார்.
ஏ.எஸ்.பன்னீர் செல்வம் எழுதிய “கருணாநிதி எ லைஃப்” என்ற ஆங்கில புத்தகத்தை இந்து பத்திரிக்கை என்.ராம் வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்றுக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பேராசிரியர் அன்பழகன் நூலகத்தை திறந்து வைத்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

திமுக அலுவலகம்
டெல்லி அரசியலின் மையப்புள்ளியாக மாற உள்ள கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. பிரமாண்ட தூண்கள், அழகிய வடிவமைப்பு என அழகு மாளிகையாக இது உருவெடுத்துள்ளது. அனைத்து நவீன வசதிகளுடன் கூடியதாக அண்ணா கலைஞர் அறிவாலயத்தை திமுக கட்டியுள்ளது. இந்த கட்டிடத்தின் முன் பகுதியில் அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் திமுக கொடி பறக்கும் வகையில் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பிரம்மாண்ட அறிவாலயத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடி கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார்.