தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு அமல் எப்படி?

Filed under: சென்னை |

தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு அமல் எப்படி?

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் இரண்டு படிப்புகளுக்கான மாணவ சேர்க்கையில் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள முற்பட்டோருக்கான 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள முற்பட்டவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன், மத்திய அரசு நிறைவேற்றியது. இருப்பினும், இந்த இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற மாட்டோம் என தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

மேலும், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடே பின்பற்றப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள மூன்று பாடப்பிரிவுகளில் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள முற்பட்டவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது.


மத்திய அரசின் பாடப்பிரிவுகள் 

தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்படி 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது எனப் பலரும் கேள்வி எழுப்பினர். அண்ணா பல்கலைக்கழகத்தில் M.Tech – Biotechnology, M.Tech – Computational Technology என இரு பாடப்பிரிவுகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது. வழக்கமாக இந்த இரு படிப்புக்களுக்கான மாணவ சேர்க்கையை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமுமே நடத்தும்.

எந்த இட ஒதுக்கீடு முறை 

ஆனால், இந்த ஆண்டு முதல் இந்க இரு படிப்புகளுக்குமான மாணவர் சேக்கையை அண்ணா பல்கலைக்கழக நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் பாடப்பிரிவு என்பதால் இதில் 49.9% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமா அல்லது அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவு 

இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் 49.9% இட ஒதுக்கீடு முறையைப் பயன்படுத்தி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டது. மத்திய அரசின் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதால் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்டோருக்கான 10% இட ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பல்கலைக்கழகங்கள் 

ஏற்கனவே, கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பலகலைக்கழகங்களிலும் 10% இட ஒதுக்கீடு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.