தேசிய மாணவர் படையுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை!

புது டெல்லி,மே 05

கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பதற்காக தேசிய மாணவர் படை (NCC) ஆற்றியுள்ள பங்கு குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதிலும் உள்ள 17 NCC இயக்குநரகங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர், இதுபோன்ற மாநாட்டின் மூலம் உரையாடுவது இதுவே முதன் முறையாகும். தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர், லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் டாக்டர் அஜித் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

நாடு தற்போது சவாலான சூழ்நிலையைக் கடந்து கொண்டிருக்கிறது என்றும், கோவிட்-19 நோயைத் தடுப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பயனுள்ள பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர், தனது உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார். இந்த நெருக்கடியிலிருந்து, நாடு வெற்றிகரமாக மீண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பதற்காக NCC இயக்குநரகங்கள் மிக முக்கியமான பங்காற்றி வருகின்றன என்று பாராட்டிய அவர், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை பயிற்சி மாணவர்கள் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, உதவி புரிகின்றனர் என்றும், இதில் 25 சதவிகிதத்தினர் பெண்கள் என்றும் அவர் கூறினார்.

தேசிய மாணவர் படையை விரிவுபடுத்த அரசு உறுதி பூண்டுள்ளது என்றும், கடலோர மற்றும் எல்லையோரப் பகுதிகளில் இதனை விரிவு படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முடிவு செயல்படுத்தப்பட இருப்பதாக, ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.