சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கம் குறைவாக உள்ளது என்றும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். இது குறித்து நேற்று நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் தெரிவித்ததாவது:
பன்றிக் காய்ச்சலால் ஏற்படும் இறப்பு என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நோயாளிகள் வேறு நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் இறப்புக்கான பிரதான காரணம் ஆய்வு செய்யப்பட்ட பிறகே உறுதி செய்யப்படும்.
இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களை விட சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கம் குறைவாக உள்ளது. இந்நோயை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து வசதிகளும் சென்னை மாநகரத்தில் உள்ளன. எனவே, பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை.
சென்னை மாநகராட்சியில் 77 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு 37 பேர் முழுமையாக குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துள்ளார். மருத்துவ முகாம்களில் 2,561 பேர் பரிசோதிக்கப்பட்டு, 237 பேருக்கு டாமிபுளு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நோய் பாதிக்கப்பட்டவருடன் தொடர்புடையவர்கள் அல்லது அந்தப் பகுதியில் வசிப்பவர் களுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு கிண்டியில் உள்ள கிங் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்படுகிறது. அனைத்து தனியார் மருத்துவமனைகளும் பன்றிக் காய்ச்சல் குறித்து தினமும் அறிக்கை அளிக்கவும் அரசினால் அங்கீகாரம் பெற்ற தனியார் பரிசோதனை கூடங்கள் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவுடன் மாநகர நல அலுவலருக்கு இ-மெயில் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள் இருந்தால் பொது மக்கள் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். தனது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால் நோய் பரவாமல் தடுக்க இயலும்.