புதிதாக பணியில் சேர்ந்தவர்களே உங்களுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கிறது !!!

Filed under: இந்தியா,தமிழகம் |

தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் புதிய ஊழியர்களுக்கு 24 % ஊதியத்தை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியாக மத்திய அரசு வழங்குகிறது.
கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், பல தினசரி கூலி தொழிலாளர்களின் வருவாயில் இழப்பை ஏற்படுத்தியது. குறு மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலர் தங்களது வேலையை இழந்தனர்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மக்கள் சுயசார்பு நிலையை எட்டவும்   பல்வேறு தற்சார்பு இந்தியா  திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. கோவிட் -19 பெருந்தொற்று பொது முடக்கத்தின் போது வேலை இழந்த தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் தற்சார்பு இந்தியா வேலை வாய்ப்பு என்ற திட்டம் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டார். மாத ஊதியமாக ரூ.15000 –த்துக்கு கீழே வழங்கும், இபிஎஃப்ஓ அமைப்பில் பதிவு செய்திருக்கும் எந்த நிறுவனத்திலும் பணிபுரியும் புதிய ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த புதிய வேலை வாய்ப்புத் திட்டத்தின் பயனாளிகள் ஆவர். இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30, 2020-க்குள் வேலை இழந்த இபிஎஃப் உறுப்பினர்கள், அக்டோபர் 1-ம் தேதிக்குப் பின்னர் பணியில் சேர்ந்து மாத ஊதியம் 15,000-க்கு கீழ் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறமுடியும்.
 
இபிஎஃப்ஓ நிறுவனத்தில் பதிவு செய்திருக்கும் நிறுவனங்களுக்கு, அவர்கள் ஊழியர்களுக்கு இபிஎஃப்ஓ நிதியாக தர வேண்டியதை அவர்கள் சார்பில் மத்திய அரசு ஊக்கத் தொகையாக வழங்கும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூன்  30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்குப் பின்னர் பணியில் சேர்ந்த தகுதியுடைய புதிய ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கும். ஆயிரம் ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களில்  ஊழியர்களின் பங்களிப்பான 12 % மற்றும்  நிறுவனங்களின் பங்களிப்பு 12 % ஆகியவை மத்திய அரசால் வழங்கப்படும் ஆயிரம் பேர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில் ஊழியர்களின் பங்களிப்பான 12% மட்டும் அரசால் வழங்கப்படும்.

தகுதிவாய்ந்த புதிய ஊழியர்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட இபிஎஃப்ஓ(யுஏஎன்)  கணக்குகளில்   மானியம் முன்கூட்டியே வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தை திருச்சியில் உள்ள பல தொழில் முனைவோர்களும், பல ஊழியர்களும் வரவேற்றுள்ளனர். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் திரு.நாராயணன் என்ற ஊழியர், சிறு நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு இந்த திட்டம் நிச்சயம் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றவர், மேலும் பல ஊழியர்கள் பயன்பெறும் வகையில் மாத ஊதியம் ரூ.15000 என்ற வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில், அனைத்து நிறுவனங்களும், அனைத்து ஊழியர்களும் பயன் பெறும் வகையில் இந்த திட்டம் தொடர்பான அனைத்து நிபந்தனைகளையும் அகற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.


தற்சார்பு இந்தியா வேலை வாய்ப்பு  திட்டம்,  புதிய ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு நிறுவனங்களை ஊக்குவிப்பதாக இருக்கும். கொவிட்-19 பெருந்தொற்று பொது முடக்கத்தால் பொருளாதார ரீதியாக பாதிகப்பட்டவர்களின் நிதி நிலையை மீண்டும் செம்மையாக்க இது உதவும். மத்திய அரசால் அளிக்கப்படும் மானிய உதவி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் புதிய தொழில்நிறுவனங்கள் தொடங்கவும் நிச்சயம் உதவும்.