மணிப்பூர் கலவரத்தில், தாய், குழந்தை எரித்துக் கொலை!

Filed under: இந்தியா |

இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறிய சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 8 வயது மகனையும், தாயையும் உயிரோடு எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் மைத்தேயி இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு பழங்குடியினத்தை சேர்ந்த குக்கி, நாகா சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை கலவரமாக மாறியது. ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த நிலையில் மணிப்பூரில் ரைபிள் பிரிவினர், துணை ராணுவத்தினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர். ஆனால் கிளர்ச்சியாளர்கள் துணை ராணுவப்படையினர் மீதும் துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்துவதால் மணிப்பூர் தொடர்ந்து கலவரமாக இருந்து வருகிறது. கலவரத்தில் காயமடைந்த 8வது சிறுவனை அவனது தாயார் மீனா ஹன்சிங் ஆம்புலன்ஸ் மூலமாக இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். உடன் உறவினர் ஒருவரும் சென்றுள்ளனர். சுமார் 10 காவலர்கள் பாதுகாப்புடன் சென்ற அந்த ஆம்புலன்ஸை ஐரோசெம்பா பகுதியில் வழிமறித்த கிளர்ச்சியாளர்கள் காவலர்கள், ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்து விரட்டி விட்டு ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்துள்ளனர். இந்த கோர சம்பவத்தில் 8 வயது சிறுவன், தாய் மீனா ஹன்சிங் மற்றும் உறவினர் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இரு சமூகத்தினரிடையேயான இந்த மோதல் மிகப்பெரும் வன்முறையாக மாறியுள்ளதால் மணிப்பூர் மாநிலமே மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.