மண்ணை விட்டு பிரிந்த நடிகர் மயில்சாமி!

Filed under: சினிமா,சென்னை |

பல திரைப்படங்களின் மூலம் தனது நகைச்சுவையால் மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் நடிகர் மயில்சாமி. இவர் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்ந்தது.

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நடிகர் மயில்சாமி, சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார். 3.30 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி,நடிகர்கள் ராதாரவி, பாண்டியராஜன், சூரி, ஜெயராம், சித்தார்த், மனோபாலா, கோவை சரளா, செந்தில், எம்.எஸ்.பாஸ்கர், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட திரையுலகினர், ஏராளமான ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்த நடிகர் மயில்சாமி, ‘காமெடி டைம்’ நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் அன்பை பெற்றவர். கருணாநிதியின் பாராட்டை பெற்றவர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது” என்று கூறியுள்ளார்.

நடிகர் பார்த்தீபன் மயில்சாமி மறைவு குறித்து தனது பதிவில், “நேற்று காலை மரணமடைந்த பின் தான் நேற்று மாலை பிறந்தது! நேற்று மாலை மரணமடைந்த பின் தான் இன்று காலை பிறந்தது. ஆனால் நேற்று காலை மரணமடைந்த நண்பர் மயில்சாமி இன்று வரை ஓயாமல் பேசப்பட காரணம் ‘இன்னொரு மனிதன் இருக்கும் வரை யாருமே இங்கு அனாதையில்லை’அந்த இன்னொரு மனிதனாய் அவர் இருந்ததுதான்! என்று குறிப்பிட்டுள்ளார்.