மரம் தங்கசாமி நினைவு நாள் !

Filed under: சென்னை,தமிழகம் |

காவேரி கூக்குரல் மூலம் 2.37 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்

மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 2.37 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.

அதன்படி, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கடலூர், விழுப்புரம் காஞ்சிபுரம், திருவள்ளூர் என 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் செப். 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் மொத்தம் 175 விவசாயிகள் தங்களுடைய 1,008 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பண மதிப்பு மிக்க டிம்பர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

இதன் தொடக்க விழா நிகழ்வு புதுக்கோட்டையில் செப்.14-ம் தேதி நடைபெற்றது. இதில் மரம் தங்கசாமி அவர்களின் மகன் திரு. தங்க கண்ணன் அவர்கள் பங்கேற்று முதல் மரக்கன்றை நடவு செய்து இப்பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்துள்ள இப்பணி குறித்து அவர் கூறுகையில், “”என் தந்தைக்கும் ஈஷாவுக்குமான தொடர்பு என்றும் பிரிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. என் தந்தை ஈஷா பசுமைக் கரங்கள் இயக்கம் தொடங்கியதிலிருந்து மக்களிடையே மரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டவர். நடைப் பயணமாக கூட சென்று விவசாயிகளிடையே டிம்பர் மரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி ஈஷா நர்சரியில் இருந்து மரக்கன்றுகளையும் எடுத்து வழங்கியுள்ளார். அனைத்து விவசாயிகளும் அவர்கள் நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு மரங்களை நடவு செய்ய வேண்டும் என்பது என் தந்தையின் அறிவுரை. அவர் இம்மண்ணில் இல்லையென்றாலும், அவர் ஊன்றிய விதையை இன்றும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது என்னவோ ஈஷா தான்.

காவேரி கூக்குரல் மூலம் கடந்த ஆண்டு கூட என் தந்தையின் நினைவாக 1.26 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்தனர். இந்த ஆண்டு அதை விட அதிகமாக 2.37 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர். இம்முயற்சிகளின் மூலம் ‘விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்; அதற்கு மரம் நட வேண்டும்’, எனும் என் தந்தையின் கனவு எளிதில் நிறைவேறும் என நம்புகிறேன்.” என்றார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கி வைத்த  காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழக விவசாயிகளிடம் மரம் நடும் பழக்கம் பெரிதும் அதிகரித்துள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து மரம் சார்ந்த விவசாய முறையின் நன்மைகளை எடுத்து கூறி வருகின்றனர். மேலும், விவசாயிகளின் விருப்பத்தின் படி, அவர்களின் மண் மற்றும் நீரின் தன்மையை பரிசோதித்து அவர்களுக்கேற்ற மரங்கள் குறித்து இலவச ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.