யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: ஐ.ஐ.டி., பட்டதாரி முதலிடம்

Filed under: இந்தியா |

புதுடெல்லி, செப் 25:
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் மும்பை ஐ.ஐ.டி. இன்ஜினியரிங் பட்டதாரி சுபம்குமார் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இது முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

2020ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 4,82,770 பேர் எழுதினர். இதில், 10,564 பேர் தேர்ச்சி பெற்றனர். பின், நடந்த பிரதான தேர்வில், 2,053 பேர் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில், இறுதிக்கட்டமான நேர்முகத் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, மொத்தம் 761 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 545 ஆண்களும், 216 பெண்களும் பல்வேறு சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி.யால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மும்பை ஐ.ஐ.டி.யில் இளநிலை சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற சுபம்குமார் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார். அவர் மானுடவியலை தனது விருப்பப் பாடமாக தேர்வு செய்திருந்தார். ஜாக்ரதி அஸ்வதி என்ற மாணவி, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பி.டெக். எலட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டம் பெற்ற இவர், சமூகவியலை தனது விருப்பப் பாடமாக தேர்வு செய்திருந்தார்.

இந்த சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் யு.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.