கோவை, ஜூன் 7
தமிழகத்தில் கோவை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஆகிய நகரங்களில் பி.எஸ்.பி.பி என்று அழைக்கப்படும் பத்மா சாஸ்திரி பால பவன் என்கிற சி.பி.எஸ்.சி. பள்ளி கோவை வடவள்ளி அருகே இயங்கி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மைத்துனரும் பழைய சினிமா நடிகருமான ஒய். ஜி. மகேந்திரன் இப்பள்ளியில் பங்குதாரராக இருக்கிறாராம். கோவை வடவள்ளி பகுதியில் இயங்கும் இந்த பி.எஸ்.பி.பி. பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். அத்துடன், அப்பகுதி மக்கள் ரஜினிகாந்த் சார் பள்ளி என்று அழைத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மார்ச் மாதம் முதல் தமிழகத்திலுள்ள எல்லாக் கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த 1/6/2020 முதல் ஆன்லைன் மூலம் இந்த பள்ளியில் வகுப்புகள் நடைபெற உள்ளதாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு துவக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கான லாகின் மற்றும் ஐ.டி. பாஸ்வேர்ட் ஆகியவையும் தரப்பட்டுள்ளது.
வடவள்ளி பகுதியைச் சேர்ந்த அருணா என்பவரின் ஆண் பெண் இரட்டை குழந்தைகள் இந்த பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த 1ஆம் தேதி ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்ட சில மணி நேரங்களில் அருணாவின் குழந்தைகள் வகுப்பில் இருந்து நீக்கப்பட்டது உடன் பெற்றோர் ஆசிரியர் அடங்கிய வாட்ஸ்அப் குழுவில் இருந்து அருணாவும் நீக்கப்பட்டுள்ளார். என்ன காரணத்திற்காக தன்னை வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கினார்கள் என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த அருணா உடனே பள்ளியை தொடர்பு கொண்டார்.
ஆனால், கடந்த ஐந்து நாட்களாக எந்தவித விளக்கமும் பள்ளி நிர்வாகம் தராமல் இழுத்தடித்துக் கொண்டு வந்தனர். அத்துடன் அவரது இரண்டு குழந்தைகளும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனால் மேலும் அருணா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் நம்மிடத்தில் கூறும்போது… இப்பள்ளியில் திடீரென நாங்கள் மட்டுமின்றி நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் இதேபோன்று எந்தவித காரணமும் இன்றி குழுவில் இருந்து நீக்கப்பட்டு குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதிக்காமல் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு உத்தரவினால் வேலை இழப்பு, ஊதியக் குறைப்பு ஆகிய காரணங்களால் செய்வதறியாமல் உள்ள நிலையில் பள்ளியின் செயல் பெற்றோர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் பள்ளி நிர்வாகத்தில் எங்களோடு நெருக்கமாக உள்ள ஆசிரியர்களிடம் விசாரித்தபோது பெற்றோர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ்அப் குழு’வை உருவாக்கியதும் அதில் கல்வி கட்டணம் எவ்வளவு என பேசியது தான் பிரச்சனை என்கின்றனர். பள்ளிகள் எப்போது திறக்கும் என்கிற சூழல் இல்லாத நிலை தற்போது உள்ளது, இந்நிலையில் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தினமும் பள்ளிக்குச் செல்லும்போது பெற்றோர்களாகிய நாங்கள் ஒன்றுக்கொன்று பழகிய அடிப்படையில் வாட்ஸ்அப் குழு’வை உருவாக்கினோம். இந்த காரணத்திற்காக எங்கள் பிள்ளைகளை பள்ளியில் இருந்து நீக்கி உள்ளனர் என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
எங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம் என்றனர். பெற்றோர்களின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் பெறுவதற்காக நாம் பள்ளி நிர்வாகத்தை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுப் போச்சு ஆகையால்தான் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால், இவரது குடும்ப உறுப்பினர்கள் கோவையில் நடத்தும் பள்ளியில் சிஸ்டமே சீரழிந்து சின்னா பின்னப்பட்டு கிடைக்கிறது என்பதுதான் நிஜமும் கூட.!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை வடவள்ளி பகுதியில் உள்ள ரஜினிகாந்த் உறவினர்கள் நடத்தும் பத்ம சாஸ்திரி பால பவன் என்கிற சி.பி.எஸ்.சி. பள்ளி நிர்வாகம் செய்துவரும் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் தட்டிக் கேட்பாரா.?