ரஷ்யாவில் நடைபெற்ற வெற்றி தினப் படை அணிவகுப்பில் இந்திய இராணுவ படைப் பிரிவு பங்கேற்றது!

Filed under: இந்தியா,உலகம் |

ஜூன் 24

1941-1945 ஆம் ஆண்டு காலத்தில், அப்போதைய சோவியத் மக்களால், போரின் போது கிடைத்த வெற்றியின் எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவை ரஷ்யா கொண்டாடுகிறது. 24 ஜூன் 2020 அன்று மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற, வெற்றி தின அணிவகுப்பில் இந்திய இராணுவப் படையினர் பங்கேற்றனர். அனைத்து அணிகளையும் சேர்ந்த 75 பேர் கொண்ட இந்திய இராணுவப் படையின் முப்படை சேவை பிரிவு, ரஷ்ய இராணுவபடை மற்றும் 17 பிற நாடுகளின் படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது, மிகப்பெரிய அளவிலான, நட்புப் படைகளில் ஒன்றாக பிரிட்டிஷ் இந்திய இராணுவப் படைகள் இருந்தன. இவை வல்லரசு சக்திகளுக்கு எதிராக வடக்கு – கிழக்கு ஆப்பிரிக்க இயக்கம், மேற்கு பாலைவன இயக்கம், ஐரோப்பிய தியேட்டர் ஆகியவற்றில் பங்கேற்றன இதில் 87 ஆயிரம் இந்தியப் படையினர் உயிர்த் தியாகம் செய்தனர். 34354 பேர் காயமடைந்தனர். இந்திய இராணுவம் எல்லா முன்னணி நிலையிலும் போரிட்டது. அது மட்டுமல்லாமல் தெற்கு, ஈரானிய வழிப்பாதை, லெண்ட் லீஸ் பாதை ஆகியவை மூலமாக ஆயுதங்கள், போர்க்கருவிகள், உதிரி பாகங்கள், உணவு ஆகியவற்றை சோவியத் யூனியன், ஈரான், ஈராக் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுவதையும் உறுதி செய்தது. 18 விக்டோரியா ஜார்ஜ் கிராஸ் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாராட்டு விருதுகள் இந்திய இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டன. 

மேலும் இந்திய இராணுவப் படையினரின் வீரத்தைப் பாராட்டி, சோவியத் யூனியன் 23 மே 1944 அன்று, ராயல் இந்திய இராணுவ படைப் பிரிவைச் சேர்ந்த சுபேதார் நாராயணராவ் நிக்கம், ஹவில்தார் கஜேந்திர சிங் சந்த் ஆகியோருக்கு சோவியத் யூனியனின் உயரிய ஆட்சிக் குழுவின் மிகைல் காலினின், அலெக்சாண்டர் கார்கின் ஆகியோர் கையெழுத்திட்ட மிக உயரிய விருதான சிவப்பு நட்சத்திர விருதுக்கான ஆணை வழங்கப்பட்டது.