சென்னை, அக் 2:
ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம், தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்தியாவின் சில மாநிலங்களில் இன்னும் முழுமையாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. படம் தீபாவளிக்கு வெளியானால் வியாபாரத்தில் பாதிப்பு உண்டாகும் என்பதால், ‘அண்ணாத்த’ படத்தினை 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதில், வரும் தீபாவளி அன்று, எந்த மாற்றமும் இன்றி, அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும்,, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல், அக்டோபர் 4ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.