அரசு பேருந்து சென்னை, அமைந்தகரை அருகே சென்றுக்கொண்டிருந்த போது, பேருந்தில் பலகை உடைந்து பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் அந்த பயணி உயிர் தப்பினார்.
திருவேற்காடு செல்லும் பெண்களுக்கான கட்டணமில்லா அரசு பேருந்து ஒன்று சென்னை அமைந்தகரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் இருந்த ஓட்டையை பலகை வைத்து மூடியுள்ளனர். அப்பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், பலகை உடைந்து அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார். அப்போது அந்த ஓட்டையில் தொங்கியபடியே சிறிது தூரம் பயணித்த அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் நல்வாய்ப்பாக அவர் உயிர் பிழைத்தார். பேருந்தில் உள்ள ஓட்டையை வீடியோ எடுத்த போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மிரட்டியதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பேருந்தில் உள்ள ஓட்டையை சீரமைக்காமல் பலகையை வைத்து அடைத்து அலட்சியமாக செயல்பட்ட தமிழக போக்குவரத்து கழகத்திற்கு பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதை விட்டுவிட்டு, சேதமடைந்த அரசு பேருந்துகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.