மணப்பாறையில் அதிமுக மகளிர்குழு பூத் கமிட்டியை துவக்கி வைத்து, கையேட்டினை வெளியிட்டு ஆலோசனை வழங்கும் விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டார். அந்த விழாவில் எல்.எல்.ஏ சந்திரசேகர், முன்னாள் எம்.பி.குமார், ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பொன்னுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் வந்தாலே பொய்யான வாக்குறுதிகளை தருவது திமுகவின் வழக்கம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்றவர்கள் நாடாளுமன்றம் சென்றார்கள் ஆனால் நகை இன்னும் வங்கியில் தான் உள்ளது. திமுக பொய்யை சொல்லி வாக்குறுதி கொடுப்பதில் கெட்டிக்காரர்கள்.
ஆ.ராசாவை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அம்மா இருக்கும்போது ஏதாவது ஒரு வார்த்தை பேச தைரியம் இருந்திருந்ததா? இன்று அம்மா இல்லை என்றதும் நீங்கள் எதை வேண்டுமானலும் பேசலாமா? கழக ஒன்றரை கோடி தொண்டர்களும் தேர்தலில் உங்களை பழி வாங்குவார்கள். இம்முறை திமுகவை தோற்கடித்துவிட்டால், இன்னும் நூற்றாண்டு காலம் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது” எனக் கூறினார்.