இந்த வருடத்தில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளதால் கூடுதல் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்ற நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி கடந்த 15ம் தேதி அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இன்னும் ஒரு சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 27ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். தற்போது பருவ மழை முன்கூட்டியே தொடங்குவதால் குமரி மாவட்டம் உள்ளிட்ட நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.