மேற்குவங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடியா மாவட்டம் கங்னாபூரில் உள்ள ஒரு கான்வென்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று 71 வயது கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. 4 நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனால் முக்கிய குற்றவாளிகள் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. தப்பி ஓடிய அவர்களைப் பிடிப்பதற்காக போலீஸார் குழு வெளிமாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.
குற்றவாளிகள் பற்றிய நம்பகமான தகவல் தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று எஸ்பி அறிவித்தார்.
விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் மேற்குவங்க அரசு கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், கன்னியாஸ்திரி பலாத்காரம் தொடர்பான விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.