ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்தார். ஆனால் உலகம் முழுவதும் நடைபெற்ற 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். ஐ.பி.எல். போட்டியிலும் முத்திரை பதித்த ஷேன் வாட்சன் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி முதன் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை வாட்சன் நிறைவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் தனது ஓய்வை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
39 வயதான வாட்சன் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று உணர்கிறேன், எனது கடைசி போட்டியை நான் நேசிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பு அவர்கள் அளித்தனர். காயங்களால் நிறைய பின்னடைவுகளுக்கு இடையே விளையாடிய நிலையில் 39 வயதில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கிறேன். இத்துடன் ஒரு சகாப்தம் முடிந்து விட்டது. வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தை தொடங்குகிறேன்’ என்று அதில் வாட்சன் கூறியுள்ளார்.