இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், அத்தகைய கணக்கெடுப்புகளின் மூலம் துல்லியமான விவரங்களைத் திரட்ட முடியாது என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில்லை என்று 1951-ஆம் ஆண்டே கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு காலத்திற்கு சற்றும் பொருந்தாதது ஆகும்.
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மராட்டிய அரசு தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய அரசின் சமூகநீதித் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 341, 342 ஆகிய பிரிவுகளின்படி பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் யார்? என்பதை குடியரசுத் தலைவர் அறிவிக்கை செய்திருப்பதால் அந்த இரு சாதிகளின் எண்ணிக்கையை மட்டும் கணக்கெடுப்பதென்று, விடுதலைக்குப் பிறகு, 1951-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதலாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போதே கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்டது; அதில் மாற்றம் செய்ய முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ள காரணம் உண்மையானது, ஆனால், சரியானது அல்ல.
இந்தியாவில் 1881-ஆம் ஆண்டு முதல் 1931-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. விடுதலைக்குப் பிறகு பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய இரு இட ஒதுக்கீட்டுப் பிரிவுகள் மட்டுமே இந்தியாவில் இருந்தன. அதனால், அப்போது அந்த இரு பிரிவுகள் குறித்த கணக்கெடுப்பு மட்டுமே போதுமானதாக இருந்தது. அப்போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவு இல்லை; அப்பிரிவினர் அடையாளம் காணப்படவும் இல்லை.
அதன்பின் இரு ஆண்டுகள் கழித்து 1953-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-ஆவது பிரிவின்படி காகா கலேல்கர் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின் 1979-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப் பட்டது. அந்த ஆணையம் 1980-இல் அளித்த பரிந்துரைப்படி தான் 1990-ஆம் ஆண்டில் முதன்முறையாக மத்திய அரசுப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டு வழங்கப்பட்டது. அதன்பின் எனது முயற்சியால் 2006-ஆம் ஆண்டில் கல்வியிலும் ஓபிசி இட ஒதுக்கீடு சாத்தியமானது.
1951-ஆம் ஆண்டிலிருந்து மக்கள்தொகை கணக்கெடுப்பில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினரின் விவரங்கள் சேகரிக்கப்படுவதற்கு என்னென்ன காரணங்களை மத்திய அரசு பட்டியலிட்டிருக்கிறதோ, அதே காரணங்களினால் 2001-ஆம் ஆண்டிலிருந்து மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி சாதிகள் குறித்த விவரங்களும் திரட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த விவரங்களை உச்சநீதிமன்றமும், பல்வேறு உயர்நீதிமன்றங்களும் கோரி வருகின்றன. சாதிவாரி விவரங்கள் திரட்டப்படாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் ஓபிசி இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது. அதனால், இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அவசியமானது, தவிர்க்க முடியாதது.
சாதியற்ற சமுதாயம் அமைக்கப் பாடுபடும் சூழலில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வேண்டாம் என்று மத்திய அரசுத் தரப்பில் முன்வைக்கப்படும் காரணம் புரியாமையையே காட்டுகிறது. சாதிகள் திடீரென்று உருவாகிவிடவில்லை. காலம் காலமாக மக்கள் செய்யும் தொழில்கள், பாகுபாடுகள் காரணமாகவே சாதிகள் உருவாயின. ஏற்றத்தாழ்வுகளையும், சாதி சார்ந்து தொழில் செய்யும் முறையையும் ஒழித்து சமத்துவமான சமுதாயம் அமைத்தால் தான் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். அதற்கு அனைத்து சமூகங்களும் முன்னேற வேண்டும். அதற்கான அடிப்படை இட ஒதுக்கீடு என்பதால், அதை உறுதி செய்ய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியமல்ல… அதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்ற வாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அறிவியலும், தொழில்நுட்பமும் வளராத, கையடக்க கால்குலேட்டர் கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். அக்கணக்கெடுப்பு விவரங்கள் 99% துல்லியமாகஉள்ளன. அவற்றின் அடிப்படையில் தான் இந்தியாவில் ஓபிசி இடஓதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என்பதற்காக மத்திய அரசு கூறும் இன்னொரு காரணம் மத்திய அரசின் ஓபிசி பட்டியலும், மாநிலங்களின் ஓபிசி பட்டியலும் வேறுவேறாக உள்ளன என்பது தான். மத்திய அரசின் ஓபிசி பட்டியலின்படி சாதி விவரங்கள் திரட்டப்பட்டால் கூட, அவற்றை மாநிலங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள முடியும். அதனால் அது ஒரு சிக்கலல்ல.
தேவை தான் கண்டுபிடிப்புகளின் தாய். இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தவிர்க்க முடியாத தேவை இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தால், அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் அனைத்தையும் எளிதில் களைய முடியும். அதனால் 2021 கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும்.