டெல்லியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 30 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரையிலும் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு சிலர் காயமடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டரில், “டெல்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், “டில்லியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என வெளியிட்டுள்ளார்.