நேபாளத்தில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதால் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
சென்னையில் வலசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் லேசாக குலுங்கியது.
தலைநகர் டெல்லி, பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும், அசாமிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
நில அதிர்வு ஏற்பட்டதால் டெல்லி மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். டெல்லியில் நில அதிர்வின் தாக்கம் குறித்து அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முடுக்கிவிட்டுள்ளார்.
நேபாளத்தில் மையம்:
சரியாக மதியம் 12.35 மணியளவில் நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேபாளத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகியது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
மேலும், நேபாளத் தலைநகர் காத்மாண்டு அருகே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். அதன் தாக்கமே வடமாநிலங்களில் நில அதிர்வை ஏற்படுத்தியிருப்பதகாவும் தெரிவித்துள்ளது.
ஆனால், நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இருந்ததாகவும். காத்மாண்டுவில் இருந்து 83 கி.மீ. தூரத்தில் 18.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அரை மணி நேரத்தில் 6.2 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானிலும், 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்து 7,000-க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்நாத் தகவல்:
நில அதிர்வுகளால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தகவல் திரட்டப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.