ஆசிய விளையாட்டு ஆடவர் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்தியாவுக்கு இவர் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு மல்யுத்தம், 65 கிலோ உடல் எடைப்பிரிவில், அரையிறுதியில் சீனாவின் யீர்லான்பீக் என்பவரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் யோகேஷ்வர் தத்.
இன்று தோவான் ஜிம்னாசியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாஜிகிஸ்தான் வீரர் ஜாலிம்கான் யுசுபோவ் என்ற வீரரை 3-0 என்று அதிரடி வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
இன்று இந்திய அணிக்கு சிறந்த நாளாக விளங்குகிறது. 20 கிமீ நடைப்போட்டியில் இந்திய வீராங்கனை குஷ்பிர் கவுர் வெள்ளி வென்றார்.
டென்னிஸில் யுகி பாம்ப்ரி மற்றும் இரட்டையரில் சானியா மிர்சா/பிரார்த்தனா தோம்பாரே ஜோடி, ஆடவர் இரட்டையரில் திவிஜ் சரண்/யுகி பாம்ப்ரி ஜோடி 3 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தத் தொடரில் முதல் முறையாக முதல் 10-ற்குள் நுழைந்துள்ளது இந்திய அணி.
இன்று 6 பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில், 4 தங்கம், 5 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.
207 (101-61-45) பதக்கங்களுடன் சீனா முதலிடமும், 2ஆம் இடத்தில் தென் கொரியாவும், 3ஆம் இடத்தில் ஜப்பானும் உள்ளன.