மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனைவில் அனுமதி!

Filed under: அரசியல்,தமிழகம் |

தேமுதிக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்பு சில நாட்களில் மீண்டும் வீடு திரும்பினார். அதன் பின்னர் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

கலந்து கொண்டாலும், அவர் அந்நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. மேலும் சுயநினைவின்றியே அவர் இருப்பது போலவே அந்த நிகழ்ச்சி முழுவதும் பிறர் உதவியோடு அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த பலரும் தேமுதிகவினர் அரசியல் லாபத்துக்காக விஜயகாந்தை வதைப்பதாகக் குற்றம் சாட்டினர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக “அவரை எப்படி பார்த்துக் கொள்வது என எங்களுக்கு தெரியும்” என தேமுதிகவின் புதிய பொதுச் செயலாளர் பிரேமலதா காட்டமாக பதிலளித்தார். இப்போது விஜயகாந்த் மீண்டும் உடல்நலக் குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக கட்சி சார்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் ‘தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்’ என தெரிவித்துள்ளது.