இலங்கையின் முன்னார் அமைச்சரான பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் பல இடங்களில் கலவரம் மூண்டுள்ளது. இதில், 130 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு உதவ, ராணுவமும் களத்தில் உள்ளது. நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கலவரத்தில், ஆளுங்கட்சி எம்.பி., மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பலியாகினர். மகிந்த ராஜபக்சே மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரது வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த பிரச்னையில் 7 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பதவி விலகிய மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் திரிகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையறிந்த போராட்டக்காரர்கள், கடற்படை தளத்தை முற்றுகையிட்டுள்ளனர். பிரச்னைக்கு காரணமான அவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு மாகாணத்தில் மல்வனை பகுதியில் உள்ள பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைத்தள்ளனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கையில் காவல்துறை தலைமை பொறுப்பில் உள்ள சீனியர் டிஐஜி தேசபந்து தென்னகோன் ஜீப்பில் சென்றபோது பொதுமக்கள் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.