தீ விபத்து ஏற்பட்ட சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை கட்டிடம் இடிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நேற்று திடீரென சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரைதளத்தில் தீப்பிடித்த நிலையில் 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தன. அங்கிருந்த 128 நோயாளிகளை தீயணைப்பு துறையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து மீட்டனர்.
இதுகுறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்திற்குள்ளான பழைய கட்டிடம் இடிக்கப்படும் என்றும், அங்கு ரூ.65 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.