சென்னை,மே 4
தமிழகம், இந்தியாவிலேயே அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் சாலை உட்கட்டமைப்பானது இன்றியமையாததாகும். சாலை உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க பல்வேறு முகமைகளோடு ஆலோசித்து புதுமையான வழிமுறைகளை மாண்புமிகு அம்மா அவர்கள் கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று, செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை – Performance Based Maintenance Contract (PBMC) ஆகும். இதில், ஒப்பந்ததாரர் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சாலைகள் மற்றும் அதில் உள்ள பாலங்களை அகலப்படுத்தி/மேம்படுத்தி, தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படும்.
உலக வங்கி வழிகாட்டுதலின்படி, நல்ல தரமான சாலை கட்டமைப்பை உருவாக்க செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டம் 2012-2013-ல் பொள்ளாச்சியில் (கோவை) முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. பின்னர் ஒவ்வொரு வருடமாக கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவள்ளூர், விருதுநகர், பழனி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இத்திட்டத்தின் மூலம் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதே முறையில்தான் தற்போது தஞ்சை மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
2019-ம் ஆண்டு சட்டமன்றப் பேரவையில் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கையின் போது புதிய அறிவிப்பில் தஞ்சாவூரில் இத்திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டது. கடந்த 19.2.2020 அன்று நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு 25.2.2020 அன்று ஒப்பந்த புள்ளியும் மின்னணு முறையில் (e-tender) கோரப்பட்டு, இன்னும் ஒப்பந்தப்புள்ளி பெறும் நிலையில் உள்ளது. ஒப்பந்த புள்ளி கோரப்பட்டதில் எவ்வித நடைமுறையும் மீறப்படவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, தி.மு.க. ஆட்சி காலத்தில் அவர்களின் வேண்டியவர்களுக்கு டெண்டர் பார்ம் கொடுக்கப்பட்டு, பாக்ஸ் டெண்டர் முறையை மேற்கொண்ட தி.மு.க கட்சியின் இன்றைய தலைவர், திரு. ஸ்டாலின் அவர்கள் நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ஊழல் என்று அறிக்கை விடுவது வேடிக்கையாக இருக்கிறது.
இந்த ஒப்பந்தப்புள்ளி தொடர்பாக தி.மு.க கட்சியை சார்ந்த ஒப்பந்ததாரர் துரை ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்ததை, முகாந்திரம் ஏதும் இல்லை என கருத்து தெரிவித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், மனுதாரரின் வழக்கறிஞரே இம்மனுவை ரிட் மனுவாக மாற்ற அனுமதி கோரியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதனை திரித்து, ஒப்பந்தம் கோரப்பட்டத்தில் ஏதோ முறைகேடு நடந்ததாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியதாக உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்ப நிலையில் தான் உள்ளது. ஆனால் ஸ்டாலின் வழக்கை இழுத்தடிக்க அரசு அதிகாரதுஷ் பிரயோகம் செய்யலாம் என ஆரூடம் தெரிவித்திருப்பது, இந்த அரசிற்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தையே காட்டுகிறது.
இத்திட்டம் தஞ்சாவூரில் செயல் படுத்தப்படுவதால் அங்குள்ள 32 ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவுள்ளது என தெரிவித்து இருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் (2020-2021) நெடுஞ்சாலைத்துறையின் பல்வேறு பிரிவுகள் மூலம் 45 க்கும் மேற்பட்ட சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ள நிலையில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் பணிசெய்வதற்கு வாய்ப்புள்ளது. இந்த விவரம் கூட தெரியாத எதிர்க்கட்சி தலைவர் அறைகுறை அறிக்கை விடுவது அவர் பதவிக்கு ஏற்புடையதல்ல.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை மேம்படுத்தி பராமரிக்க சிறந்த முறையில் தொழில்நுட்ப வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி உரிய நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், செவி வழியாக கேட்ட தகவலைக் கொண்டு, அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக, பொறியாளர்களை விஞ்சும் அளவிற்கு அவருக்கே உரிய பாணியில் இந்த ஒப்பந்த புள்ளியில் ரூ.700 கோடி அதிகம் என கருத்து தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மேலும், மின்னணு முறையில் டெண்டர் நடைபெறுவதால் தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் டெண்டர் வழங்க முடியாது. எனவே, இதில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பேயில்லை.
மாண்புமிகு அம்மாவின் ஆசியுடன் நடைபெறும் அரசு, மாநிலத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்தி தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக பணிமேற் கொண்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கொரோனா நோய் தடுப்பு பணியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று பல்வேறு மருத்துவ அமைப்புகள் பாராட்டியுள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வயிற்றெரிச்சல் காரணமாக தினந்தோறும் உண்மைக்கு மாறான அறிக்கைகளை விடுகிறார் என்றே தோன்றுகிறது.
தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு முதலில் அனுமதிக்கப்பட்ட தொகை ரூபாய் 200 கோடி. பின்பு பலகாரணங்களை காட்டி வழங்கப்பட்ட தொகை ரூபாய் 450 கோடி. அதேபோல், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-1ல் சாலைப்பணிகளுக்காக, அனுமதிக்கப்பட்ட தொகைக்கும் கூடுதலாக 75% தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏதோ ஒரு காரணத்தை கூறி கூடுதலாக தொகை வழங்கியது தான் ஊழல். இது தி.மு.க கட்சிக்கு கைவந்த கலை என்பதை நாடே அறியும்.
ஊரடங்கு நேரத்தில் தன்னை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவே, எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள், நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக, இந்த அரசை குறைகூறி அரைகுறை அறிக்கையை வெளியிட்டுவருகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி தான் என்பதை இந்திய திருநாடே அறியும். எனவே, அக்கட்சியின் தலைவர், ஊழல் தொடர்பான அறிக்கை வெளியிடுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிக்கை.