24 மணி நேரமும் செயல்படும் சென்னை சுங்கத் துறை !

Filed under: சென்னை |

சென்னை, ஏப்ரல் 24

கோவிட்-19 முடக்கநிலை சூழ்நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி (எக்ஸிம்) சரக்குகளைக் கையாள வசதியாக சென்னை சுங்கத் துறை எல்லா நாட்களும், 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை சுங்கத் துறையின் துறைமுகம், விமான நிலையம், விமான சரக்குப் பிரிவு, வெளிநாட்டு தபால் அலுவலகம், கூரியர் முனையம் மற்றும் யூ.பி. ஆகிய இடங்களில் வாரத்தில் அனைத்து வேலை நாட்களிலும், தினமும் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறைவான அலுவலர்களைக் கொண்டு சுங்கத் துறை அலுவலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. முன்னுரிமை அடிப்படையில் அனைத்து அனுமதிகளும் அளிக்கப்படுகின்றன.

A. சென்னை சர்வதேச விமான நிலையம்:

கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக 22.03.2020ல் இருந்து அனைத்து சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், இங்கே தவிக்கும் வெளிநாட்டு குடிமக்களை தாயகத்துக்கு அழைத்துச் செல்லுதல் / நிவாரண உதவிகளைக் கொண்டு செல்லும் பணிகளை சுங்கத் துறை மேற்கொண்டு வருகிறது. முடக்கநிலை அமல் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு நீடிக்கப்பட்டதை அடுத்து, 23.04.2020 வரையில் மொத்தம் 13 விமான சேவைகள் –  கோலாலம்பூர், அல்மாட்டி, பஹ்ரைன், பாலி வழியாக மெல்போர்ன், டாக்கா, பெங்களூர் மற்றும் பஹ்ரைன் வழியாக லண்டன், சியோல், டோக்கியோ ஆகிய நகரங்களுக்கு – இயக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து 1725 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

 முடக்கநிலை அமல் செய்யப்பட்டதில் இருந்து இதுவரையில் சென்னையில் இருந்து வெளிநாடுகளின் நகரங்களுக்கு 3918 பேர் பயணம் செல்வதற்கு 26 நிவாரண விமான சேவைகள் இயக்கப் பட்டுள்ளன.

பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் அனுமதி அளிக்கும் வகையில் சுங்கத் துறை செயல்பட்டது.

துபாய் வழியாக பிராங்க்பர்ட்டுக்கும் மற்றும்  அபுதாபிக்கும் ஆம்புலன்ஸ் விமானங்கள் 7 பயணிகளை இந்த காலக்கட்டத்தில் அழைத்துச் சென்றுள்ளன.

சென்னை சுங்கத் துறை கூரியர் முனையம்: வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் தயாரிக்கத் தேவையான முக்கிய பொருட்களைக் கொண்டு செல்வதற்கு சுங்கத் துறை அவசர அனுமதி வழங்கியுள்ளது; மருத்துவ கையுறைகள், முகக் கவச உறைகள், டிஜிட்டல் தெர்மாமீட்டர்களை அனுப்பவும் அனுமதி கொடுத்துள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய மூலப் பொருட்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. முடக்கநிலை அமல் தொடங்கியதில் இருந்து, 23.4.2020 வரையில், வென்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவ முகக் கவச உறைகள் தயாரிப்புக்கான முக்கிய மூலப் பொருட்கள் கொண்ட 118 சரக்குப் பெட்டகங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வந்த எக்ஸ்-ரே பாதுகாப்புக்கான முழுக் கவச உடைகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. சீனா, தென் கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளில் இருந்து அதிக இறக்குமதிப் பொருட்கள் வருகின்றன.

வெளிநாட்டு தபால் அலுவலக முனையம்: உயிர்காக்கும் மருந்துகள், தெர்மா மீட்டர்கள், N-95 முகக்கவச உறைகள் மற்றும் சாதாரண முகக் கவச உறைகள் ஆகியவை பல்வேறு நாடுகளில் இருந்து தனிநபர்களுக்கு பார்சல்கள் மூலம் வருகின்றன. அவற்றுக்கு வெளிநாட்டு தபால் அலுவலக முனையத்தில் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது.

B. சென்னை விமான சரக்குப் பிரிவு:

மீனம்பாக்கத்தில் உள்ள ஏர் கார்கோ வளாகத்தில் உள்ள சுங்கத் துறைப் பிரிவு, சென்னை விமான நிலையத்துக்கு வரும் சரக்கு விமானங்களுக்கு அனுமதி அளிக்கிறது. பயணிகள் விமான சேவைக்கு அரசு தடை விதித்துள்ளபோதிலும், சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமான சேவைகள் தொடர்கின்றன. கோவிட்-19 முடக்கநிலை மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து 81 சர்வதேச சரக்கு விமானங்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளன. வென்டிலேட்டர்களுக்கான சாதனங்கள், கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை உபகரணங்கள், பாதுகாப்பு உடைக் கவசங்கள், டிஜிட்டல் தெர்மா மீட்டர்கள் தொடர்பான பல சரக்குப் பெட்டகங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சுங்கத் துறை அனுமதி அளித்துள்ளது. சீனா, தென் கொரியா, ஹாங்காங், அமெரிக்கா, தைவான், மலேசியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இவை அதிகமாக வருகின்றன. ஏற்றுமதி சரக்குகளுக்கு ஏர் கார்கோ ஆணையரகத்தில் சிரமம் இல்லாமல் அனுமதி அளிக்கப் படுகிறது.

     காய்கறிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் கொண்டு வந்த மாலத்தீவுகள் ஏர்லைன்ஸ் விமானத்துக்கும் சென்னை சுங்கத் துறை அனுமதி அளித்துள்ளது என்று சென்னை பன்னாட்டு விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.